பாலூர் அருகே நிறுத்தத்தில் அரசு பஸ்கள் நிற்காததை கண்டித்து மறியல்

பாலூர் அருகே நிறுத்தத்தில் அரசு பஸ்கள் நிறுத்தப்படாததை கண்டித்து மறியல் போராட்டம் நடந்தது.

Update: 2023-10-26 08:21 GMT

செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் அடுத்த மேலச்சேரி பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் செங்கல்பட்டுக்கு சென்று படித்து வருகின்றனர். மேலும் ஏராளமானோர் செங்கல்பட்டு, தாம்பரம், மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ்கள் சரிவர நிறுத்தப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.

செங்கல்பட்டு - காஞ்சீபுரம் சாலையில் அமைந்துள்ள இந்த பகுதியில் அனைத்து பஸ்களும் விரைவு பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாகவும், இதனால் மேலச்சேரி பகுதியில் எந்த பஸ்சும் நிறுத்தப்படுவதில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச பஸ் பயண அட்டை வழங்கியும், தனியார் பஸ்களில் மாணவர்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் நிலை உள்ளதாகவும், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். இதனை கண்டித்து செங்கல்பட்டு - காஞ்சீபுரம் சாலையில் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாலூர் போலீசார் அரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். தொடர்ந்து அங்கு வந்த செங்கல்பட்டு போக்குவரத்து மேலாளர் தியாகராஜன் மேலச்சேரி பகுதியில் அரசு பஸ்கள் நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் உறுதி அளித்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்