திருமாவளவனை அவதூறாக பேசியவர்களை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் போராட்டம்

திருமாவளவனை அவதூறாக பேசியவர்களை கைது செய்யக்கோரி சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 200 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;

Update: 2023-02-27 20:01 GMT

ஊர்வலம்

திருமாவளவனை அவதூறாக பேசியவர்களை கைது செய்ய வலியுறுத்தி மாநகராட்சி கவுன்சிலர் இமயவர்மன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் ரா.நாவரசன், மேற்கு மாவட்ட செயலாளர் அய்யாவு, பொருளாளர் காஜாமைதீன் உள்பட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஏராளமானவர்கள் நேற்று காலை சேலத்தில் உள்ள அண்ணா பூங்கா அருகே கூடினர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல முயன்றனர். அப்போது ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். அவர்களிடம் போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி பேச்சுவார்த்தை நடத்தி, ஊர்வலத்துக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்தார். இருப்பினும் கட்சியினர் தடையை மீறி அண்ணா பூங்காவில் இருந்து ஊர்வலமாக சேலம் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்றனர். அப்போது அவர்கள் மத்திய மந்திரி அமித் ஷா, தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஆகியோர் உருவ பொம்மைகளை எரிக்க முயன்றனர். அதை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலெக்டர் அலுவலகம் அருகே திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்து பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, தடா பெரியசாமி, கருப்பு முருகானந்தம் ஆகியோர் அவதூறாக பேசி உள்ளனர். அவர்கள் 3 பேரையும் கைது செய்ய வேண்டும் என்றனர்.

இதையடுத்து அவர்களிடம் போலீசார் 2-வது முறையாக பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஊர்வலம் மற்றும் மறியல் போராட்டத்தால் நேற்று அண்ணா பூங்காவில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனிடையே கலெக்டர் அலுவலகம் முன்பு அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட 200 பேர் மீது சேலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்