திருப்புவனத்தில் பொதுமக்கள் திடீர் மறியல்
திருப்புவனம் பகுதியில் போதிய பஸ் இயக்கப்படாததால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
திருப்புவனம்
திருப்புவனத்திலிருந்து ஏனாதி வழியாக சிவகங்கைக்கு செல்லும் இரவு நேர நகர் பஸ் கடந்த சில தினங்களாக வருவதில்லை. இதனால் பொதுமக்கள் ஒரு மணி நேரத்துக்கு மேல் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அடுத்த நகர் பஸ்கள் வரும்போது கூட்டம் அதிகரித்தும் பொதுமக்கள் ஏற முடியாத சூழ்நிலை நிலவியது. இதனால் பொதுமக்கள் திருப்புவனத்தில் இருந்து பணம் கொடுத்து ஆட்டோவில் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது.. இந்த நிலையில் நேற்று இரவு திருப்புவனம் சந்தை திடலில் ஏனாதி வழியாக செல்லும் சிவகங்கை நகர் பஸ்சை எடுக்க தாமதமானதால் கிராம மக்கள் திடீரென சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் மடப்புரம், பூவந்தி வழியாக செல்லும் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம்போஸ் தலைமையில் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் அவர்கள் கலைந்து சென்றனர்.