இயல், இசை, நாடக மன்றம் நடிகர்களுக்கு உதவும்

இயல், இசை, நாடக மன்றம் நடிகர்களுக்கு உதவும் என்று நடிகர் வாகை சந்திரசேகர் திண்டுக்கல்லில் கூறினார்.

Update: 2023-04-04 17:06 GMT

திண்டுக்கல் முத்தமிழ் நாடக நடிகர் சங்க தொடக்க விழா, கோட்டை மாரியம்மன் கோவில் கலையரங்கில் நேற்று நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் தலைவர் செல்லமுத்தையா தலைமை தாங்கினார். தொழில் அதிபர் ஜி.சுந்தரராஜன் முன்னிலை வகித்தார். செயலாளர் ராமலிங்கம் வரவேற்றார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

விழாவில் அமைச்சர் பேசுகையில், முன்பெல்லாம் கோவில் திருவிழாக்களில் நாடகம் நடத்தப்படும். காலையில் நாடகம் முடிந்த பின்னர் தான் வீட்டுக்கே செல்வோம். கால சூழ்நிலையால் நாடகங்கள் குறைந்து விட்டன. சினிமாவில் கூட நாடக நடிகர்களை போன்று பாடமுடியாது. நாடக நடிகர்களின் கோரிக்கைகள் நிறைவேற அரசு துணையாக இருக்கும், என்றார்.

இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் நடிகர் வாகை சந்திரசேகர், டி.டி. சங்கரதாஸ் சுவாமிகள் படத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், நான் சிறுவயதில் திண்டுக்கல்லை அடுத்த பொன்மாந்துறை புதுப்பட்டியில் தான் வசித்தேன். அப்போது திண்டுக்கல்லில் 4 சினிமா தியேட்டர்களே இருந்தன. அவற்றில் திரைப்படத்தை பார்த்ததால் நடிக்கும் ஆசை ஏற்பட்டு, நாடகங்களில் நடித்தேன். பின்னாளில் சென்னைக்கு சென்று சினிமாவிலும் நடித்தேன். எனவே நாடக நடிகர்களின் சிரமம் அனைத்தும் எனக்கு தெரியும். நாடக நடிகர்களுக்கு தேவையான உதவிகளை இயல், இசை, நாடக மன்றம் செய்யும், என்றார்.

இதில் தமிழ்நாடு இயல், இசை, நாடக கலைஞர்களின் மாநில பேரவை தலைவர் பாலசுப்பிரமணி, திண்டுக்கல் முத்தமிழ் நாடக நடிகர் சங்க பொருளாளர் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், நாடக நடிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்