2-ம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வு

வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கான உடல்தகுதி தேர்வு வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.

Update: 2023-02-06 17:06 GMT

2-ம் நிலை காவலர்கள்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த நவம்பர் மாதம் 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது. அதில், வேலூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 1,059 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கான உடல்தகுதி தேர்வு வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதல்நாளான நேற்று 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதில், கலந்து கொள்வதற்காக நேற்று அதிகாலை முதல் நேதாஜி விளையாட்டு மைதானத்தின் முன்பு ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர். காலை 6.30 மணியளவில் உடல்தகுதி தேர்வு தொடங்கியது. முதற்கட்டமாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்டன. அதைத்தொடர்ந்து உயரம், மார்பளவு அளவீடு, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்டவை நடைபெற்றன.

கேமராவில் பதிவு

வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமையில் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் மேற்பார்வையில் 120 போலீசார் உடல்தகுதி தேர்வில் ஈடுபட்டனர். முதல்நாள் 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததில் 51 பேர் பங்கேற்கவில்லை. இதையடுத்து உயரம், மார்பளவு சரிபார்த்தல் உள்ளிட்டவற்றில் பலர் தகுதி பெறவில்லை. தேர்வான 312 பேர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டனர். அதில் 18 பேர் குறிப்பிட்ட நேரத்தில் இலக்கை ஓடி முடிக்காமல் தகுதியிழந்தனர். நேற்றைய முடிவில் 294 பேர் தேர்வாகினர்.

மார்பளவு அளவீடு, அசல்சான்றிதழ் சரிபார்ப்பை டி.ஐ.ஜி., போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் பார்வையிட்டனர். உடல்தகுதி தேர்வு தொடர்பான அனைத்தும் கேமராவில் பதிவு செய்யப்பட்டன.

இன்று (செவ்வாய்கிழமை) 2-ம் நாள் உடல்தகுதி தேர்வில் பங்கேற்க 400 பேருக்கும், நாளை (புதன்கிழமை) 259 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2-ம் கட்ட தேர்வு 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடைபெற உள்ளது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்