எழுத்து தேர்வில் வென்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு

2-ம் நிலை ஆண், பெண் காவலர் பணிக்கான எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நேற்று திருச்சியில் 2 இடங்களில் தொடங்கியது.

Update: 2023-02-06 19:09 GMT

2-ம் நிலை ஆண், பெண் காவலர் பணிக்கான எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நேற்று திருச்சியில் 2 இடங்களில் தொடங்கியது.

2-ம் நிலை காவலர் பணி

தமிழக காவல்துறையில் 2-ம் நிலை பிரிவில் காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கு காலியாக உள்ள 3 ஆயிரத்து 552 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த ஆண்டு ஜூன் 30-ந் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்த பணிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த நவம்பர் 27-ந் தேதி நடைபெற்றது. எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் ஆண்களுக்கான உடல் தகுதி தேர்வு திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்திலும், பெண்களுக்கான உடல் தகுதி தேர்வு கே.கே.நகரில் உள்ள மாநகர ஆயுதப்படை மைதானத்திலும் நேற்று காலை தொடங்கியது.

549 பேர் தகுதி

இதற்காக 1,887 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. இதில் முதல் நாளான நேற்று ஆண்கள் 400 பேர், பெண்கள் 420 பேர் அழைக்கப்பட்டு இருந்தனர். திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன் முன்னிலையில், திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மேற்பார்வையில் ஆண்களுக்கும், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா முன்னிலையில், துணை கமிஷனர் சுரேஷ்குமார் மேற்பார்வையில் பெண்களுக்கும் தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வுக்காக நேற்று முன்தினம் இரவே வெளியூரில் உள்ளவர்கள் மைதானத்தை சுற்றி உள்ள பகுதியில் வந்து தங்கி இருந்தனர். அதிகாலை 5.30 மணி முதல் தேர்வர்கள் மட்டுமே மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

என்ஜினீயரிங் பட்டதாரிகள்

காலை 6 மணிக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி தொடங்கியது. அதைத்தொடர்ந்து உயரம், மார்பளவு அளவிடப்பட்டது. இதில் தகுதி பெற்ற ஆண்கள் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும், பெண்கள் 400 மீட்டர் ஓட்ட பந்தயத்திலும் கலந்து கொண்டனர். முதல் நாள் பங்கேற்ற 336 ஆண்களில் 285 பேரும், 356 பெண்களில் 264 பேரும் அடுத்த சுற்று தேர்வுக்கு தகுதி பெற்றனர். உடல் தகுதி தேர்வில் பங்கேற்றவர்களில் 75 சதவீதம் பேர் என்ஜினீயரிங் பட்டதாரிகள் என்று போலீசார் தெரிவித்தனர்.

முன்னதாக ஓட்டப்பந்தயத்தின் போது பெண் தேர்வர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்த போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதுபோல் கர்ப்பிணிகளும் நேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டனர். தேர்வு முழுவதும் வீடியோவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.

பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு

இந்த தேர்வையொட்டி அண்ணா விளையாட்டு மைதானம், ஆயுதப்படை மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த தேர்வு காரணமாக திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்திற்குள் 5 நாட்களுக்கு விளையாட்டு வீரர்கள், பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்