புனித பெரியநாயகி அன்னை ஆலய தேரோட்டம்
புனித பெரியநாயகி அன்னை ஆலய தேரோட்டம் நடைபெற்றது.
விராலிமலை தாலுகா, ஆவூரில் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீரமாமுனிவரால் கட்டப்பட்ட புனித பெரியநாயகி அன்னை ஆலயம் உள்ளது. இங்கு பாஸ்கா தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் மாலை வேளையில் பல்வேறு பங்கு தந்தையர்கள் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினர். விழாவின் முக்கிய நிகழ்வான முதல் நாள் பாஸ்கா திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. தொடர்ந்து சப்பர பவனி நடைபெற்றது. பின்னர் அன்று மாலை புனித பெரியநாயகி அன்னையின் நவநாள் சிறப்பு திருப்பலியும், அதைத்தொடர்ந்து இரவு 10.30 மணியளவில் ஆண்டவரின் உயிர்ப்பு பாஸ்கா நிகழ்வும் நடைபெற்றது. விழாவின் தொடர்ச்சியாக நேற்று காலை 11 மணியளவில் திருவிழா சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து மதியம் 56 அடி உயர பெரிய தேர் உள்ளிட்ட மூன்று தேர் பவனி நடைபெற்றது. முன்னதாக ஆலயத்தில் இருந்து உயிர்த்த ஆண்டவரின் சொரூபத்தை மேளதாளம், அதிர்வெட்டுகள், முழங்க ஊர்வலமாக தேருக்கு எடுத்து வந்து பெரிய தேரில் பொருத்தப்பட்டது. அதேபோல சிறிய 2 தேர்களில் சம்மனசு, மாதா ஆகிய சொரூபங்கள் பொருத்தப்பட்டது. பின்னர் துவரங்குறிச்சி பங்குத்தந்தை இன்னாசிமுத்து தேரை புனிதம் செய்து அர்ச்சித்து வைத்து வடம் பிடித்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலையை வந்தடைந்தது. இதில் திருச்சி, மணப்பாறை, இலுப்பூர், விராலிமலை, கீரனூர், மாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர். விழாவையொட்டி ஆங்காங்கே அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆவூர் பங்குத்தந்தை சூசைராஜ் தலைமையில் ஊர் நிர்வாக குழு மற்றும் பங்கு இறை மக்கள் செய்திருந்தனர்.