மகளிர் உரிமைத்தொகைக்கான 2-வது கட்ட முகாம்

குமரியில் மகளிர் உரிமைத்தொகைக்கான 2-வது கட்ட முகாம் நேற்று 384 இடங்களில் தொடங்கியது.

Update: 2023-08-05 18:45 GMT

நாகர்கோவில்:

குமரியில் மகளிர் உரிமைத்தொகைக்கான 2-வது கட்ட முகாம் நேற்று 384 இடங்களில் தொடங்கியது.

2-ம் கட்ட முகாம்

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தை பொறுத்தவரையில் 5.7 லட்சத்திற்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதை தொடர்ந்து கடந்த 24-ந் தேதி 400 இடங்களில் தொடங்கிய முதற்கட்ட முகாம் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதில் மொத்தம் 3 லட்சத்து 4 ஆயிரத்து 504 பேருக்கு விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டிருந்தது. அதே சமயத்தில் 2 லட்சத்து 3 ஆயிரத்து 268 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஒரு லட்சத்து ஆயிரத்து 236 பேர் விண்ணப்பிக்கவில்லை. தங்களுக்கு மகளிர் உரிமை தொகை பெற தகுதி இல்லை என்று கருதி அவர்கள் விண்ணப்பிக்கவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்தநிலையில் 2-வது கட்ட முகாம் நேற்று விளவங்கோடு, கிள்ளியூர் மற்றும் திருவட்டார் தாலுகாவுக்கு உட்பட்ட 384 இடங்களில் தொடங்கியது. முன்னதாக ரேஷன் கடை ஊழியர்கள் விண்ணப்பங்களை வீடு வீடாக விண்ணப்பித்தனர். அந்த வகையில் மொத்தம் 2 லட்சத்து 72 ஆயிரத்து 782 விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளன. இதைத் தொடர்ந்து நேற்று முகாமில் பொதுமக்கள் தங்கள் விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு, வங்கி புத்தகம் மற்றும் மின் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து சமர்ப்பித்தனர். இந்த முகாமானது வருகிற 16-ந் தேதி வரை நடக்கிறது.

அமைச்சர் ஆய்வு

இதற்கிடையே திருநந்திக்கரை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீதேவி திருமண மண்டபத்தில் நடைபெற்ற 2-ம் கட்ட முகாமை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுபற்றி அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், "பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தினத்தில் அந்தந்த பகுதியில் உள்ள முகாம்களுக்கு சென்று விண்ணப்ப படிவங்களை வழங்க வேண்டும். கூட்ட நெரிசலை தவிர்க்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்றார்.

ஆய்வின் போது பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், திருவட்டார் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், திருவட்டார் தாசில்தார் முருகன், அரசு வக்கீல் ஜான்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்