மர்ம காய்ச்சலுக்கு மருந்துக்கடை உரிமையாளரின் மனைவி சாவு

திருச்சியில் மர்ம காய்ச்சலுக்கு மருந்துக்கடை உரிமையாளரின் மனைவி உயிரிழந்தார்.

Update: 2023-09-15 19:00 GMT

திருச்சியில் மர்ம காய்ச்சலுக்கு மருந்துக்கடை உரிமையாளரின் மனைவி உயிரிழந்தார்.

வேகமாக பரவும் டெங்கு

தமிழ்நாடு முழுவதும் அண்மையில் பெய்த மழையால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உயர்ந்து வருகிறது.

திருச்சி மாவட்டத்திலும் பலர் காய்ச்சலுக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை.

மருந்துக்கடை உரிமையாளர்

திருச்சி திருவானைக்காவல் நரியன் தெருவை சேர்ந்தவர் ராஜசுகுமார். இவர் திருவானைக்காவல் டிரங்க் சாலையில் மருந்துக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி கனகவல்லி (வயது 38).

கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கனகவல்லி ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் இரவு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மர்ம காய்ச்சலுக்கு சாவு

அங்கு தீவிர சிகிச்சையில் இருந்து வந்த கனகவல்லி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதுகுறித்து திருச்சி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் கேட்ட போது, கனகவல்லிக்கு டெங்குகாய்ச்சல் அறிகுறி ஏதும் இருந்ததாக தெரியவில்லை. அவர் சாதாரண வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்து இருக்கலாம். ரத்தப்பரிசோதனை அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்பு தான் அவர் எதனால் இறந்தார் என்று உறுதியாக கூற முடியும் என்றனர். மர்ம காய்ச்சலுக்கு பெண் ஒருவர் பலியான சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்