வலி நிவாரண மருந்து வழங்கினால் மருந்துக்கடை உரிமம் ரத்து

டாக்டரின் பரிந்துரை சீட்டு இன்றி வலி நிவாரண மருந்து வழங்கினால் மருந்துக்கடை உரிமம் ரத்து மருந்து கட்டுப்பாட்டுத்துறை உதவி இயக்குனர் எச்சரிக்கை

Update: 2022-10-16 18:45 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சின்னையா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், துணைத்தலைவர் முத்துராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், தூக்க மாத்திரை, மனநல மாத்திரை, வலி நிவாரண மாத்திரைகள் டாக்டரின் பரிந்துரை சீட்டுக்கு மட்டுமே சட்ட விதிமுறைப்படி விற்பனை செய்தல் குறித்து விளக்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் கலந்துகொண்டு பேசுகையில், தூக்க மாத்திரை, மனநல மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை இளைஞர்கள் சிலர் தவறாக பயன்படுத்தி போதைப்பழக்கத்திற்கு ஆளாகின்றனர். அதை மருந்து வணிகர்கள் தடுத்து நல்ல ஆரோக்கியமான சமுதாயம் உருவாக சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் என்றார். அதனை தொடர்ந்து மாவட்ட மண்டல மருந்து கட்டுப்பாட்டுத்துறை உதவி இயக்குனர் அதியமான் பேசுகையில், மனநல, வலி நிவாரண, தூக்க மாத்திரைகள் சட்டமுறைப்படி டாக்டரின் பரிந்துரை சீட்டுக்கு மட்டும் வழங்க வேண்டும். இந்த மருந்து கொள்முதல், விற்பனை, கையிருப்பு விவரங்களை சரியாக பராமரிக்க வேண்டும். சட்டவிதிகளை மீறும் மருந்துக்கடை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் கடையின் உரிமமும் ரத்து செய்யப்படும் என்றார். கூட்டத்தில் மருந்து வணிகர் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சவுந்தரராஜன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்