மகனிடம் இருந்து ரூ.90 லட்சத்தை மீட்டு கொடுக்க வேண்டும்; போலீஸ் சூப்பிரண்டிடம் முதியவர் புகார் மனு
மகனிடம் இருந்து ரூ.90 லட்சத்தை மீட்டு கொடுக்க வேண்டும்; போலீஸ் சூப்பிரண்டிடம் முதியவர் புகார் மனு;
கோபிசெட்டிபாளையம் அருகே கணக்கம்பாளையத்தை சேர்ந்த நாச்சிமுத்து (வயது 84) என்பவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறிஇருந்ததாவது:-
கணக்கம்பாளையத்தில் எனக்கு சொந்தமான நிலம் உள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு விவசாயம் செய்ய முடியவில்லை என்பதால், எனது நிலத்தை விற்பனை செய்தேன். எனது மகன் சுப்பிரமணி மற்றும் மகள்களுக்கு முடிந்த தொகையை கொடுத்துவிட்டு மீதமுள்ள ரூ.20 லட்சத்தை வங்கி, தபால் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தேன். எனது மகனும், மருமகளும் பணம் வேண்டும் என்று கேட்டதால் ரூ.20 லட்சத்தை எடுத்து கொடுத்துவிட்டேன். ஏற்கனவே நிலம் வாங்கி தருவதாக ரூ.70 லட்சத்தை பெற்று கொண்டார். ஆனால் நிலமும் வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. தற்போது எனது மகனும், மருமகளும் என்னை கவனித்து கொள்வதில்லை. பணம் கேட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து ரூ.90 லட்சத்தை மீட்டு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறிஇருந்தார்.