கொடைக்கானலில் திடீர் பெட்ரோல் தட்டுப்பாடு; சுற்றுலா பயணிகள் பரிதவிப்பு

கொடைக்கானலில் திடீரென்று பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் பரிதவித்தனர்.;

Update: 2022-08-16 17:03 GMT

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் வார விடுமுறை மற்றும் சுதந்திர தினம் என தொடர் விடுமுறை காரணமாக கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருந்தது. இதனால் நகரின் முக்கிய சுற்றுலா இடங்கள் களைகட்டின. மேலும் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் படையெடுத்து வந்ததால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் குறிப்பாக இளைஞர்கள் ஏராளமான மோட்டார் சைக்கிள்களில் வருகை தந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் கொடைக்கானலில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் திடீரென்று பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களில் பெட்ரோல், டீசல் நிரப்ப முடியாமல் அவதியடைந்தனர். அத்துடன் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமலும் அவர்கள் பரிதவித்தனர்.

இதுகுறித்து பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர்களிடம் கேட்டபோது, கடந்த 3 நாட்களில் சுற்றுலா வாகனங்கள் அதிக அளவில் வந்ததால், பெட்ரோல், டீசல் இருப்பு தீர்ந்துவிட்டது. நேற்று இரவு பெட்ரோல், டீசல் வந்துவிடும். நாளை முதல் பெட்ரோல், டீசல் விற்பனை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்றனர். இருப்பினும் பெட்ரோல், டீசல் இருப்பு இருந்த பெட்ரோல் விற்பனை நிலையங்களில் எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள் அணிவகுத்து நின்றன.


Tags:    

மேலும் செய்திகள்