ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு
பண்ருட்டி அருகே ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டுகள் வீசிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுப்பேட்டை:
பண்ருட்டி அருகே உள்ள குடுமியான்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி(வயது 60). தி.மு.க. கிளை செயலாளரும், ஊராட்சி மன்ற தலைவருமான இவர், நேற்று இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவு 12 மணி அளவில் மர்மநபர்கள், கலியமூர்த்தி வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் 2 பெட்ரோல் குண்டுகள், அவரது வீட்டின் மொட்டை மாடியில் விழுந்தது. ஆனால் அது வெடிக்கவில்லை.
குடும்பத்தினர் அதிர்ச்சி
இந்த சத்தம் கேட்டு கலியமூர்த்தி குடும்பத்தினர் வெளியே வந்தனர். இவர்களை கண்டதும் மர்மநபர்கள், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். வீட்டின் மாடியில் காலி மதுபாட்டில் மற்றும் சோடா பாட்டில் உடைந்து சிதறி கிடந்தது. பெட்ரோல் வாசனையும் வீசியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கலியமூர்த்தி குடும்பத்தினர், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் சந்திரன், புதுப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் துணை இயக்குனர் சண்முகம் நேரில் வந்து பார்வையிட்டு, தடயங்களை சேகரித்தார். இந்த வழக்கில் துப்பு துலக்குவதற்காக கடலூரில் இருந்து மோப்பநாய் கூப்பர் வரவழைக்கப்பட்டது. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீட்டை மோப்பமிட்ட அது, அங்கிருந்து தெரு வழியாக ஓடிச்சென்று நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
காரணம் என்ன?
குடுமியான்குப்பத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் கலியமூர்த்தி குடும்பத்திற்கும், அதே கிராமத்தை சேர்ந்த ஒரு தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த முன்விரோதம் காரணமாக கலியமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு, பெட்ரோல் குண்டுகள் வீசிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.