மணமகள் அழைப்பு ஊர்வலத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு; மேளம் அடிப்பதில் மோதல்

தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மேளம் அடிப்பதில் ஏற்பட்ட மோதலில் மணமகள் அழைப்பு ஊர்வலத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2023-05-14 11:37 GMT

தி.மு.க. நிர்வாகி

சென்னை முகப்பேர் வேணுகோபால் தெருவைச் சேர்ந்தவர் கவுசல்யா. இவர், திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பந்தல் அமைப்பது, மேளம் அடிப்பது உள்பட சவுண்ட் சர்வீஸ் நடத்தி வருகிறார். இவருடைய மகள் சரண்யாவுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடைபெற உள்ளது. முன்னதாக சரண்யாவின் தாய் மாமனும், சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளருமான தமிழ் என்பவர் வீட்டில் நேற்று முன்தினம் இவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மேளம் அடிப்பதில் மோதல்

இதற்காக கவுசல்யாவின் சவுண்ட் சர்வீஸ் பார்ட்டிகளும், அதே பகுதியைச் சேர்ந்த இபு என்பவர் நடத்தி வரும் சவுண்ட் சர்வீஸ் பார்ட்டிகளும் மேளம் அடித்துக் கொண்டு கவுசல்யாவின் வீட்டில் இருந்து மணமகளை அவருடைய தாய் மாமனான தி.மு.க. நிர்வாகி தமிழ் வீட்டுக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர். முகப்பேர் சாலை சந்திப்பு அருகே வந்தபோது மேளம் அடிப்பது தொடர்பாக இரு சவுண்ட் சர்வீஸ் பார்ட்டிகள் இடையேயும் திடீரென மோதல் ஏற்பட்டது. இருதரப்புக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது.

பெட்ரோல் குண்டு வீச்சு

அப்போது இபுவும், அவருடைய நண்பர்களும் திடீரென மது பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி துணியை சொருகி பற்ற வைத்து மணமகள் அழைப்பு ஊர்வலத்தில் பங்கேற்ற கூட்டத்தில் வீசினர். இதில் பயங்கர சத்தத்துடன் பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியது. இதனால் மணமகள் அழைப்பு ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் அலறி அடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர். நல்லவேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இது குறித்து அப்பகுதி மக்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான கொரட்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இபு சவுண்ட் சர்வீஸ் பாட்டியை சேர்ந்த முகப்பேரைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் (26), பெரிய நொளம்பூரைச் சேர்ந்த கணேஷ் (26) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்