விருகம்பாக்கத்தில் தனியார் விடுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு - 2 மர்மநபர்கள் தப்பி ஓட்டம்
விருகம்பாக்கத்தில் தனியார் விடுதியில் பெட்ரோல் குண்டு வீச்சி விட்டு 2 மர்மநபர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.;
சென்னை வடபழனியை சேர்ந்தவர் தமீம் அன்சாரி (வயது 38). இவர், அதே பகுதியில் 21 அறைகள் கொண்ட தங்கும் விடுதியை சொந்தமாக நடத்தி வருகிறார். நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் மது பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி, அதில் தீ வைத்து விடுதியின் வரவேற்பு அறையின் மீது வீசிவிட்டு தப்பிச்சென்றனர். அந்த பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியதில் அங்கிருந்த கண்ணாடிகள் நொறுங்கியது. மேலும் மரப்பொருட்கள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
பின்னர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த விருகம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும் விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? அல்லது அங்கு தங்கியிருந்தவர்களுடன் ஏற்பட்ட மோதலின் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.