பெட்ரோல் கேனுடன் வந்த மூதாட்டியால் பரபரப்பு
கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெட்ரோல் கேனுடன் வந்த மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம்,
கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெட்ரோல் கேனுடன் வந்த மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
கொலை மிரட்டல்
காட்டுபரமக்குடி பகுதியை சேர்ந்தவர் பழனி மகன் மங்கு (வயது72). இவர் கடந்த மாதம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு மண்எண்ணெய் கேனுடன் வந்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார். அப்போது அவர் தனது சொத்தை குழந்தைகளுக்கு சரிசமமாக பிரித்து கொடுத்துவிட்ட நிலையில் தான் உழைத்து சம்பாதித்த நிலத்தை பிரித்து கொடுக்கும்படி மகன்கள் கொலைமிரட்டல் விடுத்து வருகின்றனர்.
நானும் எனது மனைவியும் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்துள்ள அந்த சொத்தினை கேட்டு மிரட்டுகின்றனர். எனவே, எனது சொத்தை மீட்டு எனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனு கொடுத்தார்.
இந்தநிலையில் நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு இவரின் மனைவி ராமாயி வந்தார். அவர் பெட்ரோல் கேனுடன் வந்ததை கண்டு போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர் அளித்த மனுவில் கூறியிருந்ததாவது:- எனது கணவர் முதியோர் சட்டத்தை தவறாக பயன்படுத்தி தற்கொலை செய்துகொள்வதுபோல நடித்துள்ளார். சிலரின் தூண்டுதலின்பேரில் குழந்தைகளுக்கு கொடுத்த இனாம் செட்டில்மென்டை ரத்து செய்ய முயன்று வருகிறார்.
பரபரப்பு
நான் எனது மகன் ஆதிமூலம் வீட்டில்தான் வசித்து வருகிறேன். என்னை கவனிப்பதுபோல் எனது கணவரையும் கவனித்து கொள்ள தயாராக உள்ளனர். ஆனால், அவர் வர மறுக்கிறார். எனது கணவர் மீதும் அவரை தூண்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன். இவ்வாறு கூறப்பட்டிருந்தது. கணவனும் மனைவியும் வயதான காலத்தில் அவரவர் வசம் உள்ள மகன்கள், மகள்களின் தூண்டுதலின்பேரில் கலெக்டர் அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் தீக்குளிக்க வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.