மக்களை தேடி மருத்துவம் திட்ட சுகாதார அலுவலர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

மக்களை தேடி மருத்துவம் திட்ட பகுதிநேர சுகாதார தன்னார்வலர்கள் ஊதிய உயர்வு வழங்க கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2022-05-30 17:30 GMT

தர்மபுரி:

மக்களை தேடி மருத்துவம் திட்ட பகுதிநேர சுகாதார தன்னார்வலர்கள் ஊதிய உயர்வு வழங்க கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

சுகாதார தன்னார்வலர்கள்

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். மொத்தம் 367 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.

இந்த கூட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பகுதி நேர சுகாதார தன்னார்வலர்களாக பணி புரியும் பெண்கள் திரண்டு வந்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தில் 300 பெண்கள் பகுதி நேர சுகாதார தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருகிறோம். பஸ் வசதி இல்லாத இடங்களில் சில கிலோ மீட்டர் தூரம் .வரை வீடு வீடாக சென்று நோயாளிகளுக்கு மாத்திரை மற்றும் சிகிச்சை தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறோம். எங்களுக்கு மாதம் தலா ரூ.4,500 ஊதியமாக வழங்கப்படுகிறது. இந்த ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் முறையாக ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பிரதமரின் பராமரிப்பு நிதி

தர்மபுரி மாவட்டம் சிவாடி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், எங்கள் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளைச் சேர்ந்தவர்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்திவந்த வழிப்பாதையை சிலர் அடைக்க முயற்சி செய்கிறார்கள். இதுகுறித்து விசாரணை நடத்தி நாங்கள் தொடர்ந்து அந்த வழி பாதையை பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று ஆய்வு நடத்திய கலெக்டர் திவ்யதர்சினி அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் ஏரி மற்றும் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுவர்கள், மின்சாரம் தாக்கி உயிர் இழந்த ஒருவர் என 3 பேரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வரப்பெற்ற தலா ரூ.1 லட்சம் உதவித் தொகை உள்பட மொத்தம் 4 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் நிதி உதவியை வழங்கினார்.

இதேபோல் கொரோனா தொற்றால் தாய், தந்தை ஆகிய 2 பேரையும் இழந்த தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 19 ஆதரவற்ற குழந்தைகளுக்கு பாரத பிரதமரின் பராமரிப்பு நிதி உதவியின் கீழ் வரப்பெற்ற ரூ.1 கோடியே 52 லட்சத்து 62 ஆயிரத்து 70 அஞ்சலக வைப்புத் தொகைக்கான கணக்கு புத்தகங்களை அந்த குழந்தைகளுக்கு கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்