காவிரி ஆற்று பகுதியில் கம்பி வேலி அமைக்கக்கோரி கலெக்டரிடம் மனு

கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் காவிரி ஆற்று பகுதியில் கம்பி வேலி அமைக்கக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2023-02-20 18:30 GMT

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். கூட்டத்தில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், சாமானிய மக்கள் நல கட்சி, காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயனூர் காவிரி ஆற்றில் குளித்த புதுக்கோட்டையை சேர்ந்த 4 மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். அதே நாளில் வாங்கல் காவிரி ஆற்று பகுதிகளிலும் மணல் புதை குழியில் சிக்கி ஒருவர் இறந்தார். இதே போல் கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் 200-க்கும் மேற்பட்டோர் மணல் புதைகுழியில் மூழ்கி இறந்து உள்ளனர். எனவே கரூர் மாவட்டத்தில் 40 கிலோ மீட்டர் தூரம் உள்ள காவிரி ஆற்றில் கம்பி வேலி அமைக்க வேண்டும், நீரில் மூழ்கி உயிரிழந்த பள்ளி மாணவிகள் 4 பேரின் குடும்பத்திற்கும் ரூ.28 லட்சம் இழப்பீடாக அரசு வழங்க வேண்டும், இதைப்போன்று இதற்கு முன்பு நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் உரிய நிவாரணம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், காவிரி ஆற்றில் உள்ள மணல் புதை குழிகளை உடனடியாக மூடி, 10 ஆண்டு காலம் காவிரி ஆற்றில் மணல் அள்ள தடை செய்ய வேண்டும். மேலும் வெளிநாட்டு இயற்கை ஆற்று மணலை இறக்குமதி செய்து தமிழகத்தின் மணல் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இடம் தெரியவில்லை

கிருஷ்ணராயபுரம் பகுதிக்குட்பட்ட பூவம்பாடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுத்தனர். அந்த மனுவில், பூவம்பாடி பகுதியில் கடந்த 2000-ம் ஆண்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இந்நிலையில் அதில் சிலர் மட்டுமே வீடு கட்டி குடியேறிய உள்ளனர். இன்னும் சிலர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் எது என தெரியாததால் வீடு கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே மேற்கொண்ட இடத்தில் வீடு கட்டி குடியேறும் வகையில் இடத்தை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அபராதம் விதிக்க வேண்டும்

சமூக ஆர்வலர் முத்துக்குமார் கொடுத்த மனுவில், கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து பஸ் நிலையங்களிலும் தனி நபர்கள் மற்றும் அமைப்பு சார்ந்த பிற நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், சினிமா விளம்பரங்கள் ஆகியவற்றை ஒட்டி வருகின்றனர். இதுபோன்று விளம்பரங்களை அரசாங்கத்திற்கு சொந்தமான பஸ் நிலையங்கள் மற்றும் பிற இடங்களிலும் விளம்பரம் செய்வதை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடை செய்ய வேண்டும் மீறினால் அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்