மழையால் சேதம் அடைந்த பயிர்களுக்கு பாரபட்சமின்றி உரிய நிவாரணம் வழங்க வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு

மழையால் சேதம் அடைந்த பயிர்களுக்கு பாரபட்சமின்றி உரிய நிவாரணம் வழங்க வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2023-04-03 19:11 GMT

மழையால் சேதம் அடைந்த பயிர்களுக்கு பாரபட்சமின்றி உரிய நிவாரணம் வழங்க வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் நடந்தது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கோரிக்கை தொடர்பான மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். இதில் அரசுத்துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் திருவெறும்பூர் வட்ட தலைவர் சங்கிலிமுத்து தலைமையில் நிர்வாகிகள் கலெக்டரிடம் அளித்த மனுவில், "திருவெறும்பூர் பகுதியில் கடந்த பிப்ரவரிமாதம் பருவம் தவறி பெய்த மழையால் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டன. இது தொடர்பாக அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி தற்போது நிவாரணம் வழங்கி வருகிறார்கள். ஆனால் முறையாக கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும்.

மேலும், திருவெறும்பூர் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் அலுவலர்களை பணியிடமாற்றம் செய்ய வேண்டும்" என்று கூறி இருந்தனர்.

முன்னாள் ராணுவத்தினர்

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் முன்னாள் ராணுவ அதிகாரிகள் சங்கத்தினருக்கு ஆதரவாக திருச்சி மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்க தலைவர் ரங்கநாதன், பொதுச்செயலாளர் தேவதாஸ் உள்பட நிர்வாகிகள் கலெக்டரிடம் அளித்த மனுவில், பழைய பென்சன் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்து, அதனை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

இதேபோல் இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்றுகள், ரேஷன்கார்டு, முதியோர் உதவித்தொகை உள்பட பொதுமக்களிடம் இருந்து 485 மனுக்கள் பெறப்பட்டன.

மாவட்ட நலப்பணி நிதிக்குழு

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் முகாம் நடைபெறும்போது, அவர்கள் அமரவும், மாற்றுதிறனாளிகளின் வசதிக்காகவும் மாவட்ட நலப்பணி நிதிக்குழுவில் இருந்து ரூ.1 லட்சத்து 47 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் 3 பேர் அமரக்கூடிய 10 செட் இருக்கைகள் அதாவது 130 ேபர்கள் அமரக்கூடிய வகையில் வழங்கப்பட்டது.மேலும், பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் ஒரு ஏக்கரில் அதிகமான பட்டு முட்டை தொகுதிகள் வளர்ப்பு மற்றும் பட்டுக்கூடு அறுவடை செய்த மாவட்ட அளவிலான மூன்று சிறந்த விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை சண்முகவேலுக்கும், 2-ம் பரிசாக ரூ.15 ஆயிரத்துக்கான காசோலையை கண்ணனுக்கும், மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையை செந்தில்குமாருக்கும் கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்