அம்பையில் அரசு கல்லூரி அமைக்கக்கோரி கலெக்டரிடம் மனு
அம்பையில் அரசு கல்லூரி தொடங்க வேண்டும் என்று கலெக்டரிடம் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. மனு கொடுத்தார்.
அம்பை தொகுதி எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் விஷ்ணுவிடம் கோரிக்கை மனு வழங்கினார். அதில், ''தண்ணீர் வீணாவதை தடுக்கும் வகையில் கன்னடியன் கால்வாய், வடக்கு மற்றும் தெற்கு கோடை மேலழகியான் கால்வாய்கள், நதியுண்ணி கால்வாய் ஆகியவற்றுக்கு தடுப்பு சுவரோடு கூடிய சிமெண்டு தளம் அமைக்க வேண்டும். பாபநாசம் முதல் கோபாலசமுத்திரம் வரையிலும் அறுவடை செய்யப்படும் நெல்லை பாதுகாக்க குடோன்கள் அமைக்க வேண்டும். கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைத்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். தாமிரபரணி ஆற்றை மாசுபடாமல் பாதுகாக்க பாதாள சாக்கடை திட்டம் அமைக்க வேண்டும்.
அம்பை அரசு ஆஸ்பத்திரியை மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியாக மேம்படுத்த வேண்டும். அங்கு சித்தா ஆஸ்பத்திரியும் அமைக்க வேண்டும். பாபநாசம் முதல் திருவனந்தபுரம் வரை 'மலை வழிச்சாலை' அமைக்க வேண்டும். அம்பையில் அரசு மகளிர் கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி, விவசாய கல்லூரி தொடங்க வேண்டும். மணிமுத்தாறு பூங்காவை சீரமைக்க வேண்டும். அம்பை நகராட்சி, 7 பேரூராட்சிகளிலும் மின் மயானங்கள் அமைக்க வேண்டும். அம்பை தொகுதியில் வீடு வசதி இல்லாமல் வறுமையில் வாடும் 5 ஆயிரம் ஏழை குடும்பங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தர வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அப்போது அ.தி.மு.க. மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கூனியூர் மாடசாமி, சேரன்மாதேவி ஒன்றிய செயலாளர் மாரி செல்வம், அம்பை நகர செயலாளர் அறிவழகன், மணிமுத்தாறு முன்னாள் பேரூராட்சி தலைவர் சிவன்பாபு, அம்பை ஒன்றிய துணை செயலாளர் பிராங்கிளின், அம்பை கவுன்சிலர் மாரிமுத்து மற்றும் பலர் உடன் இருந்தனர்.