தொழிலாளியின் உடலை பெற்று தரக்கோரி உறவினர்கள் கலெக்டரிடம் மனு

திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள தொழிலாளியின் உடலை பெற்று தரக்கோரி உறவினர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2023-06-20 18:46 GMT

விபத்து ஏற்பட்டு...

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே தென்னந்திரையன் பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 42). ெதாழிலாளி. இவரை நல்லதங்கால்பட்டி கிராமத்தை சேர்ந்த போர்வெல் உரிமையாளர் சக்திவேல் என்பவர் ராஜஸ்தான் மாநிலத்திற்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு பழனிச்சாமி வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு அவருக்கு ராஜஸ்தான் மாநிலத்திலேயே விபத்து ஏற்பட்டது. பின் அங்கு பணியாற்றி வந்த சக பணியாளர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்து திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பழனிச்சாமி கடந்த 17-ந் தேதி பரிதாபமாக இறந்தார்.

உரிய இழப்பீடு

இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள பழனிச்சாமியின் உடலை மருத்துவர்கள் கொடுக்க மறுப்பதாகவும், முறையான முதல் தகவல் அறிக்கை நகல் இருந்தால் மட்டுமே அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பழனிச்சாமியை வேலைக்கு அழைத்து சென்ற சக்திவேல், பழனிச்சாமிக்கு எவ்வாறு விபத்து நடந்தது என்ற விவரங்களை உறவினர்களுக்கும், மருத்துவமனைக்கும் தெரிவிக்கவில்லை.

இந்த சம்பவத்தில் அலட்சியமாக இருப்பதாக குற்றம் சாட்டியும், சக்திவேல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், 4 நாட்களாக திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள பழனிச்சாமியின் உடலை உறவினர்களிடம் பெற்றுக் கொடுப்பதோடு உயிரிழந்த பழனிசாமியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு தொகையை அரசு பெற்று தர வேண்டும் என்று அவரது மனைவி பாப்பாத்தி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட உறவினர்கள் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

காலில் விழுந்து கதறல்

இதனிடையே புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக சாலை வழியாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. காரில் சென்றார்.

இதைப்பார்த்த பழனிச்சாமியின் உறவினர்கள் காரை மறித்து விஜயபாஸ்கரின் காலில் விழுந்து கதறி அழுததோடு பழனிச்சாமியின் உயிரிழப்பு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்