தென்காசி வழியாக பெங்களூருவுக்கு சிறப்பு ரெயில் இயக்கக்கோரி அதிகாரியிடம் மனு
தென்காசி, சங்கரன்கோவில் வழியாக பெங்களூருவுக்கு சிறப்பு ரெயில் இயக்கக்கோரி ரெயில்வே அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது.;
சங்கரன்கோவில்:
மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் ஆனந்தை தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில், 'நெல்லையில் இருந்து தென்காசி, சங்கரன்கோவில், மதுரை வழியாக பெங்களூருவுக்கு சிறப்பு ரெயில் இயக்க வேண்டும், ஈரோடு-நெல்லை ரெயிலை தென்காசி வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும், சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தில் லிப்ட் அமைத்தல், கூடுதலாக விளக்குகள் அமைத்தல், பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்த வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு இருந்தது.
அந்த மனுவை பெற்றுக்கொண்ட ரெயில்வே கோட்ட மேலாளர் ஆனந்த், சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தென்காசி வழியாக பெங்களூருவுக்கு ரெயில் இயக்குவதற்கு சாத்திய கூறுகள் ஆய்வு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தில் லிப்ட் அமைப்பதற்கு பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.