திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பஸ் நிறுத்தத்தில் மீண்டும் பஸ்கள் நின்று செல்ல கலெக்டரிடம் மனு
திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் நல்லதம்பி எம்.எல்.ஏ. தலைமையில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் நல்லதம்பி எம்.எல்.ஏ. தலைமையில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
பஸ் நிறுத்தங்கள் அகற்றம்
வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் வழியாக ஊத்தங்கரை வரை ரூ.300 கோடியில் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டது. இதையொட்டி திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி மெயின் ரோடு பகுதியில் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு வந்த மீனாட்சி தியேட்டர் பஸ் நிறுத்தம் மற்றும் பெங்களூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள் திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பயணிகளை இறக்கி விட்டு சென்று கொண்டிருந்த பஸ் நிறுத்தம் ஆகியவை தற்போது எடுக்கப்பட்டுவிட்டது.
இதனால் அரசு அலுவலகங்கள், தீயணைப்பு நிலையம், நகராட்சி, திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மருத்துவமனை, நகர காவல் நிலையம் போன்றவற்றுக்கு செல்பவர்கள் புதுப்பேட்டை ரோடு பஸ் நிறுத்தம் அருகே இறங்கி வரவேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். மேலும் பல்வேறு வியாபார நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள் அந்த பகுதியில் உள்ளன. எனவே, மீண்டும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பஸ்கள் நின்று செல்ல உத்தரவிட வேண்டும்.
கலெக்டரிடம் மனு
அத்துடன் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே உள்ள இரும்பு தடுப்புகளை எடுத்துவிட்டு வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல வழி ஏற்படுத்தி தர வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ. நல்லதம்பி தலைமையில் பாத்திர வியாபாரிகள் சங்க நிர்வாகி ஏ.டி.ஜி. இந்திரஜித், ரோட்டரி சங்க முன்னாள் துணை நிலை ஆளுநர் கே.பரந்தாமன், ஸ்டேஷனரி சங்க நிர்வாகி எம்.சங்கர், சூப்பர் மார்க்கெட் சங்க நிர்வாகி எம். ஜெயகாந்தன் ஆகியோர் முன்னிலையில் பலதரப்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டு கலெக்டர் தெ. பாஸ்கர பாண்டியனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
பொருளாதாரம், வாழ்வாதாரம் பாதிப்பு
அந்த மனுவில், திருப்பத்தூருக்கு மீனாட்சி தியேட்டர் பேருந்து நிறுத்தம் என்பது வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இதயம் போன்றதாகும். சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு பஸ் நிறுத்தம் இருந்து வந்தது. தற்போது பஸ் நிறுத்தம் இல்லாததால் கடைத் தெருவிற்கு பஸ் நிலையத்தில் இருந்து புதுப்பேட்டை ரோட்டில் இறங்கி செல்வதற்கு மிகுந்த சிரமமாக உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு மட்டுமல்ல எங்களின்(வியாபார நிறுவனங்கள்) பொருளாதாரமும், வாழ்வாதாரமும் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது.
மேலும் வட்டார வளர்ச்சி அலுவலகம், எதிரில் உள்ள தடுப்புகளை அகற்றி பொதுமக்கள் கடந்து செல்லவும் வாகனங்கள் திரும்பிச் செல்லவும் வழி ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
பரிசீலனை
மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன், பஸ்களை மீண்டும் நிறுத்தி செல்வது குறித்து பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்தார்.
எம்.எல்.ஏ.வுடன் திருப்பத்தூர் மாவட்ட ஆப்செட் அச்சக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பி.ஆர். முருகேசன், பாத்திர வியாபாரிகள் சங்கம் கே.பழனி, முத்துக்குமார், சின்னத்தம்பி, மெஷனரி வியாபார நிர்வாகிகள் சுரேஷ், மீரா ஜாப்ருல்லா, குமார், பிரமோத்குமார், உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.