பொது சுகாதார வளாகத்தை சீரமைக்கக்கோரி கலெக்டரிடம் மனு

பொது சுகாதார வளாகத்தை சீரமைக்கக்கோரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2023-09-04 18:16 GMT

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

அரியலூர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 320 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து கலெக்டரால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அளித்த மனுவில், கயர்லாபாத் மற்றும் கல்லக்குடி கிராமங்களிலுள்ள பொது சுகாதார வளாகம் பழுதடைந்து தற்போது முட்புதர்கள் மண்டிக் கிடக்கிறது.

சீரமைக்க நடவடிக்கை...

இதனால் இவ்வளாகத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இது குறித்து பல முறை ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட கலெக்டர் மேற்கண்ட சுகாதார வளாகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

மேலும், படைவீரர் கொடிநாள் 2019-ம் ஆண்டில் ரூ.13.01 லட்சம் வசூல் செய்த அரியலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகருக்கும், 2020-ம் ஆண்டில் படைவீரர் கொடிநாள் வசூல் ரூ.3.86 லட்சம் வசூல் செய்த மகளிர் உதவி திட்ட அலுவலர் ரேவதிக்கும், சென்னை முன்னாள் படைவீரர் நல இயக்ககம் மூலம் வழங்கப்படும் வெள்ளி பதக்கம் மற்றும் அரசு முதன்மை தலைமை செயலாளர் பாராட்டிய பாராட்டுச் சான்றிதழ்களையும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்