நிலுவை சம்பளம் வழங்கக்கோரி தொழிற்சங்கம் சார்பில் மனு
ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நிலுவை சம்பளம் வழங்கக்கோரி தொழிற்சங்கம் சார்பில் மனு அளித்தனர்.;
ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் 38 ஊராட்சிகளில் தலா இரண்டு துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு அரசு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம், அகவிலைப்படி, மருத்துவ படி உள்பட மாத ஊதியமாக 2022-ம் ஆண்டு முதல்ரூ.7 ஆயிரத்து 332 வழங்கப்படுகிறது. ஆனால் இந்த சம்பளத் தொகை ஒவ்வொரு ஊராட்சியிலும் வேறுபடுவதாக கூறப்படுகிறது. இதனால் தமிழ்நாடு துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் கே.லட்சுமணன் தலைமையில் ஒரே மாதிரியான சம்பளம் வழங்கக்கோரியும், கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள சம்பளத்தை தற்போது அரசு நிர்ணயித்துள்ள சம்பள விகிதபடி வழங்கவும் வட்டார வளர்ச்சி அலுவலர் துரையிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அவர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
மாநில துணைத் தலைவர் சரவணன், மாவட்ட தலைவர் கண்ணன் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் உடன் இருந்தனர்.