மகளிர் உரிமைத்தொகை கேட்டு பெண்கள் மனு

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மகளிர் உரிமைத்தொகை கேட்டு பெண்கள் மனு கொடுத்தனர்.

Update: 2023-10-17 00:00 GMT

குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பூங்கொடி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சேக்முகையதீன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, நிலம் எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோட்டைகுமார் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அடிப்படை வசதிகள், உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 178 பேர் மனு கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் 28 பேருக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்குவதற்கான ஆணைகளையும் அவர் வழங்கினார்.

மகளிர் உரிமைத்தொகை

இதில் குஜிலியம்பாறை தாலுகா கோட்டாநத்தம் கிராமம் வசந்தகதிர்பாளையத்தை சேர்ந்த பெண்கள் கொடுத்த மனுவில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் உரிய ஆவணங்களுடன் முறையாக விண்ணப்பித்து இருந்தோம். ஆனால் இதுவரை எங்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கவில்லை. ஏழை குடும்பத்தை சேர்ந்த தங்களுக்கு உரிமைத்தொகை வழங்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கொடுத்த மனுவில், கொடைக்கானல் தாலுகா பெரியூர் ஊராட்சி மன்றவயல் கிராமத்தில் வசிக்கும் பழங்குடி மக்களை இழிவாக பேசிய நபர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மாணவி மீது தாக்குதல்

சின்னாளப்பட்டியை சேர்ந்த ஒரு மாணவி, தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த மாதம் அவர் பள்ளியில் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அவர் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டார். இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம், பெற்றோர் கேட்டபோது மாணவி சரியாக படிக்கவில்லை என்று கூறியுள்ளனர். அதன்பின்னர் ஒருநாள் பள்ளியில் மாணவிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் மாணவியின் பள்ளி மாற்று சான்றிதழை பெற்று கொள்ளும்படி பள்ளி நிர்வாகம் கூறுவதாக, பெற்றோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

8 பவுன் நகை திருட்டு

அம்மையநாயக்கனூரை சேர்ந்த கதிரவன் என்பவர் கொடுத்த மனுவில், நான் தனியார் தோட்டத்தில் தங்கியிருந்து விவசாய வேலை செய்கிறேன். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு எனது வீட்டில் இருந்த 8 பவுன் நகைகள் திருடு போய் விட்டது. இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நகைகளை மீட்டு தரவேண்டும் என்று கூறியிருந்தார்.

திண்டுக்கல்லை அடுத்த கோணப்பட்டியை சேர்ந்த சிலர் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்யும் நபர்களை ஒதுக்கி வைக்கின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்