அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக்கோரி கிராம மக்கள் மனு

அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக்கோரி குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.

Update: 2023-07-31 18:47 GMT

தாமரைக்குளம்:

குறை தீர்க்கும் நாள் கூட்டம்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தா.பழூர் ஒன்றியம், கடம்பூர் ஊராட்சி கோவில் சீமை கிராம மக்கள் அளித்த மனுவில், கோவில் சீமை கிராமத்தில் 150 ரேஷன் அட்டைதாரர்கள் வசித்து வருகிறோம். ஆனால் ரேஷன் பொருட்கள் வாங்க கடம்பூர் கிராமத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே எங்கள் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தர வேண்டும். எங்கள் கிராமத்தில் இருந்து மழவராய நல்லூர் கிராமத்திற்கு செல்வதற்கு குறுக்கு சாலை உள்ளது.

தற்போது அந்த சாலை பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அந்த சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. எனவே அந்த சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பகளை அகற்றி தார் சாலை அமைத்து தர வேண்டும். எங்கள் கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியானது மிகவும் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. அந்த தொட்டிைய இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய தொட்டி அமைக்க வேண்டும், சுடுகாட்டிற்கு செல்லும் மண் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும், என்று கூறியிருந்தனர்.

குடிநீர் பிரச்சினை

ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் உள்ள 16-வது வார்டில் 2 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வந்தது. இதுபற்றி நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டதால், எங்கள் வார்டில் சமுதாயக்கூடம் அருகில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து எங்கள் தெருவிற்கு குடிநீர் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் சில நாட்களில் குடிநீர் வரவில்லை. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும், முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. எனவே குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

மேலும் கூட்டத்தில் முதியோர், மாற்றுத்திறனாளி உதவித்தொகை, பட்டா மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 336 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்