கழிவுநீர் வடிகால் வசதி கேட்டு கிராம மக்கள் மனு
கழிவுநீர் வடிகால் வசதி கேட்டு கிராம மக்கள் மனு அளித்தனர்.
தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்தனர். இதில் வெளிப்பிரிங்கியம் கிராமத்தில் சிவன் கோவில் தெருவில் சரியான திட்டமிடலின்றி கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்ல வழி வகை இல்லாமல் புதிதாக சிமெண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையில் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி குட்டை போல் காட்சி அளிக்கிறது. அதனை கடந்து செல்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. நீர் தேங்கிய பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
மேலும் அதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாவதால், தெருவில் வசிப்பவர்களுக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. குழந்தைகள், முதியவர்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே அப்பகுதியில் கழிவு நீர் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கோரி வெளிப்பிரிங்கியம் கிராம மக்கள் மனு அளித்தனர்.