திருக்குறுங்குடிமலை நம்பி கோவிலில் மீண்டும் அன்னதானம் வழங்க வேண்டும்-சபாநாயகரிடம், பக்தர்கள் மனு

திருக்குறுங்குடி மலை நம்பி கோவிலில் மீண்டும் அன்னதானம் வழங்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவுவிடம், பக்தர்கள் கோரிக்ைக மனு அளித்தனர்.

Update: 2023-04-16 21:05 GMT

வள்ளியூர்:

திருக்குறுங்குடி மலை நம்பி கோவிலில் மீண்டும் அன்னதானம் வழங்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவுவிடம், பக்தர்கள் கோரிக்ைக மனு அளித்தனர்.

கோரிக்கை மனு

திருக்குறுங்குடி மலை நம்பி கோவில் அன்னதான குழுவினர், சபாநாயகர் அப்பாவுவிடம் கோரிக்கை மனு வழங்கினர். அதில் கூறியிருப்பதாவது:-

திருக்குறுங்குடியில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான அழகிய நம்பிராயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சுவாமி நின்ற நம்பி, வீற்றிருந்த நம்பி, கிடந்த நம்பி, திருப்பாற்கடல் நம்பி, மலை நம்பி என ஐந்து நிலைகளில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து அருள் பாலித்து வருகின்றனர்.

இதில் மலை நம்பி கோவில் திருக்குறுங்குடி ஊருக்கு மேற்கே சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வனத்துறையினர் அமைத்துள்ள செக் போஸ்டில் இருந்து சுமார் மூன்றரை கிலோமீட்டர் தூரம் பக்தர்கள் நடந்தோ அல்லது தனியார் ஜீப்புகளில்தான் செல்ல வேண்டும்.

அன்னதானம்

பக்தர்களின் வசதிக்காக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மாத கடைசி சனிக்கிழமை அன்று அன்னதான குழு சார்பில் காலை முதல் மதியம் வரை அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. கொரோனா காலகட்டங்களில் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல கட்டுப்பாடு இருந்த காரணத்தினால் அன்னதானம் திட்டம் செயல்படுத்துவதில் தடைப்பட்டது.

கொேரானா முடிவுக்கு வந்த பின்பு பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அரசும், வனத்துறையும் அனுமதி வழங்கி உள்ள நிலையில் பக்தர்களால் வழங்கப்பட்டு வந்த அன்னதான திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வனத்துறையினர் தடை விதித்து அனுமதி மறுத்து வந்தனர்.

அனுமதிக்க வேண்டும்

இதனால் கடந்த ஓராண்டுக்கு மேலாகியும் அன்னதானம் திட்டம் செயல்படுத்தாததால் மலைநம்பி கோவிலுக்கு நடந்து வரும் பக்தர்கள் உணவின்றி மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

வனப்பகுதியில் எந்தவித கடைகளும் இல்லாததால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை உண்ண உணவின்றி மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே மலைதம்பி கோவிலில் பக்தர்களால் வழங்கப்படும் அன்னதான திட்டம் தொடர்ந்து செயல்படுத்த மீண்டும் வனத்துறையினர் அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

குழுவினரிடம் உறுதி

நிகழ்ச்சியில் மலை நம்பி கோவில் அன்னதான குழு தலைவர் சுப்பிரமணியன், உறுப்பினர்கள் இசக்கியப்பன், சுப்பிரமணியன், சிவகுமார், அருணாசலம், வெங்கடேஷ், எத்திராஜன் ராமானுஜதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து வனத்துறை அமைச்சரிடம் எடுத்துக் கூறி விரைவில் அன்னதான திட்டத்திற்கு அனுமதி பெற்று தருவதாக சபாநாயகர் அப்பாவு மலை நம்பி கோவில் அன்னதான குழுவினரிடம் தெரிவித்ததாக அவர்கள் கூறினர்.

தி.மு.க. மாவட்ட துணைச்செயலாளர் நம்பி, ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, அன்பரசு, சுபாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்