கலெக்டரிடம் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் மனு
நெல்லை கலெக்டரிடம் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
தேர்தல் காலத்தில் தெரிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி தமிழகத்தில் உள்ள மத்திய, மாநில அரசு பொதுத்துறை ஓய்வூதியர்களிடம் கையெழுத்து வாங்கி அதனை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் முதல்-அமைச்சருக்கு மனு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதன்படி நெல்லை மாவட்ட மத்திய, மாநில அரசு பொதுத்துறை ஓய்வூதிய பேரமைப்பு சார்பில் ஓய்வூதியர்களிடம் கையெழுத்து வாங்கி நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற பணியாளர் சம்மேளன தலைவர் சந்தானம் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் நலச்சங்க அமைப்பாளர்கள் நவநீதகிருஷ்ணன், சுப்புலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த நாதன், ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் நலச்சங்க மாநில அமைப்பாளர் ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.