உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் மனு
உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் மனு அளிக்கப்பட்டது.
கரூர்,
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 34 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பிரபுசங்கர் வழங்கினார். இக்கூட்டத்தில் 266 மனுக்கள் பெறப்பட்டன.இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 51 மனுக்கள் பெறப்பட்டது. அந்தவகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் 4 பேருக்கு திறன்பேசி, ஒருவருக்கு 3 சக்கரவண்டி, ஒருவருக்கு எல்போ ஊன்றுகோல், ஒருவருக்கு கார்னர் சீட், 5 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
நலத்திட்ட உதவிகள்
மேலும் கூட்டுறவுத்துறையின் சார்பில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வங்கி கடனும், வருவாய்த்துறை மூலம் ஒருவருக்கு முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்காக 1 லட்சத்திற்கான காசோலையும், 2 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளையும், ஒருவருக்கு விதவை உதவித்தொகைக்கான ஆணையும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் 2 பேருக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வீதம் 3 வருடங்களுக்கு நிதி வழங்குவதற்கு ஆணையும், சிறு சேமிப்புத்துறையின் சிறப்பாக வசூல் செய்த 2020-21-ம் ஆண்டிற்கான நிலை முகவர்கள் மற்றும் மகளிர் முகவர்களுக்கு முதல் பரிசு ரூ.3 ஆயிரம் மதிப்பிலான என்.எஸ்.சி. பத்திரமும் மற்றும் கேடயமும், 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மதிப்பிலான என்.எஸ்.சி. பத்திரமும், 3-ம் பரிசாக ரூ.1000 மதிப்பிலான என்.எஸ்.சி. பத்திரமும் என 34 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
7 அம்ச கோரிக்கை
இக்கூட்டத்தில் தேசிய பார்வையற்றோர் நல இணையம் சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை பணம் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ரூ.1,000-த்தில் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும். உதவித்தொகையை அவரவர் வீட்டிற்கே சென்று கொடுக்க வேண்டும். பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதோர், வாய்பேசாதோர் ஆகியோர்களுக்கு செல்போன் உடனடியாக வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீடு கொடுப்பதாக சென்ற ஆண்டு மாற்று திறனாளிகள் தினத்தன்று அறிவித்ததை இதுவரை செயல்படுத்தப்படவில்லை. மேற்படி இலவச வீடு 2 பேருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. மற்ற நபர்கள் மனு செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பன உள்பட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மனு அளித்தனர்.