கைதான பேராசிரியரை காவலில் எடுத்து விசாரிக்க கோா்ட்டில் மனு

மருத்துவ மாணவி தற்கொலை வழக்கில், பேராசிரியரை காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பாக கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

Update: 2023-10-18 21:12 GMT

தூத்துக்குடி வி.இ.ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார், வியாபாரி. இவரது மகள் சுகிர்தா (வயது 27). இவர் குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியில் தங்கி படித்து வந்தார். கடந்த 6-ந் தேதி மாணவி சுகிர்தா கல்லூரியில் ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலும், மாணவி சுகிர்தா எழுதி இருந்த கடிதத்தையும் குலசேகரம் போலீசார் கைப்பற்றினர். அதில், கல்லூரி பேராசிரியர் பரமசிவம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும், சீனியர் மாணவர் ஹரீஷ், மாணவி பிரீத்தி ஆகியோர் மனதளவில் தொல்லை செய்ததாகவும் கூறியிருந்தார். அதன்பேரில் பரமசிவம், பிரீத்தி, ஹரிஷ் ஆகிய 3 பேர் மீது போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் 13-ந்தேதி பேராசிரியர் பரமசிவத்தை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய ஹரீஷ் மற்றும் பிரீத்தி ஆகியோர் மதுரை கோாட்டில் ஆஜராகி, முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். அவர்களுக்கு கோா்ட்டு ஜாமீனும் வழங்கியது.

இந்த நிலையில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பரமசிவமை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர். இதற்காக நேற்று நாகர்கோவிலில் உள்ள 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், பரமசிவமை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என கூறியிருந்தனர். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு விஜயலட்சுமி, விசாரணையை இன்று (வியாழக்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்