தாமிரபரணி ஆற்றின் பெயரை மாற்றக் கோரி மதுரை ஐகோர்டில் மனு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

பொருநை ஆறு என மாற்றம் செய்யக்கோரி மனு தொடர்பாக 12 வாரங்களில் உரிய முடிவெடுக்க தமிழ்நாடு அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-12-02 11:19 GMT

மதுரை,

தூத்துக்குடி புதுக்கோட்டையைச் சேர்ந்த எஸ்.எம்.ஏ.காந்திமதிநாதன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ''பொதிகை மலையில் உற்பத்தியாகி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக மன்னார் வளைகுடா கடலில் கலக்கிறது. தாமிரபரணி வற்றாத ஜீவ நதியாகும். தாமிரபரணி என்பது வடமொழிச் சொல். இதன் தமிழ் பெயர் பொருநை நதியாகும்.

திருவிளையாடல் புராணம், மங்கல நிகண்டு, முக்கூடற்பள்ளு, பெரிய புராணம் என பல தமிழ் இலக்கியங்களில் தாமிரபரணி பொருநை நதி என்றே அழைக்கப்படுகிறது. இதனை பல்வேறு அகழ்வாராய்ச்சியாளர்கள், தமிழறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கி.பி.1011 ஆண்டில் பொறிக்கப்பட்ட முதலாம் ராஜேந்திர சோழனின் கல்வெட்டிலும் பொருநை நதி என்றே உள்ளது. இதனால் தாமிரபரணி நதியின் பெயரை பொருநை நதி என மாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்தநிலையில், தாமிரபரணி ஆற்றின் பெயரை, பொருநை ஆறு என மாற்றம் செய்யக்கோரி மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 12 வாரங்களில் உரிய முடிவெடுக்க தமிழ்நாடு அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தாமிரபரணி என்பது வடமொழிச்சொல், பொருநை என்றே சங்ககால இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று மனுதாரர் தரப்பு வாதிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்