பாப்பாரப்பட்டி ஏரிக்கரை அருகே வசிக்கும் தொழிலாளர்களுக்கு மாற்று இடத்தில் வீடுகள் கட்டி தர வேண்டும்-கலெக்டர் சாந்தியிடம் கோரிக்கை
தர்மபுரி:
பாப்பாரப்பட்டியில் உள்ள சின்ன ஏரிக்கரை பகுதி அருகே துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிட்ட 30 தொழிலாளர்களின் குடும்பத்தினர் வீடுகள் கட்டி கடந்த 60 ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் பாப்பாரப்பட்டி ஏரியில் தூர்வாரும் பணி மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், ஏரிக்கரையோரம் வசிக்கும் 30 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வீடுகளை அகற்ற வேண்டும் என்று வருவாய் துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதனால் அங்கு வசித்து வரும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சாந்தியிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் மாற்று இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்கி இலவச தொகுப்பு வீடுகள் கட்டி தர வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை மனு அளிக்கும் நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி சின்னசாமி மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.