பா.ம.க.வினரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-போலீஸ் சூப்பிரண்டிடம் மனு

Update: 2023-04-15 18:45 GMT

நாமக்கல்:

நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் பி.கே.செந்தில் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வனிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எருமப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட அலங்காநத்தம் கிராமத்தில் பா.ம.க.வை சேர்ந்த அஜய், பிரவின், கவுசிக், அரவிந்த் ஆகியோர் மற்றொரு தரப்பினரால் தாக்கப்பட்டு உள்ளனர். ஆனால் எருமப்பட்டி போலீசார் ஒருதலைபட்சமாக இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். எனவே எங்களது மனுவை விசாரணை செய்து, சம்பந்தப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 4 பேரை தாக்கிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.

அப்போது மாநில உழவர் பேரியக்க துணை செயலாளர் பொன்.ரமேஷ், மாநில வன்னியர் சங்க துணை தலைவர் மனோகரன், மாவட்ட தலைவர் தினேஷ் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்