தொப்பூர் சுங்கச்சாவடி அருகே விபத்துகளை தடுக்க சாலையில் தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை
தர்மபுரி:
நல்லம்பள்ளி ஒன்றியம் பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொப்பூர் சுங்கச்சாவடி பகுதியில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் விபத்துகளை தடுப்பதற்காக, தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதனால் விபத்துகள் ஏதும் நடைபெறாமல் பாதுகாக்கப்பட்டது. இந்தநிலையில் இந்த தடுப்பு வேலிகள் தற்போது அகற்றப்பட்டுள்ளன. இதனால் சிலர் தங்களது வாகனங்களை சாலையின் இருபுறமும் வெள்ளைக்கோடு வரை நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். இதன் காரணமாக தற்போது அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. எனவே போலீசார் சுங்கச்சாவடியின் இருபுறமும் விபத்துகள் நடக்காத வகையில், தடுப்பு வேலிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.