பழுதடைந்த தொகுப்பு வீடுகளை சீரமைக்க வேண்டும்-குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் மனு

Update: 2022-12-12 18:45 GMT

தர்மபுரி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பழுதடைந்த தொகுப்பு வீடுகளை விரைவாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.

பழுதடைந்த தொகுப்பு வீடுகள்

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று ஆய்வு நடத்திய கலெக்டர் சாந்தி அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கும்பாரஅள்ளி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் எங்கள் பகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியினருக்கு கலைஞர் வீட்டு வசதி திட்டம் மற்றும் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம் ஆகியவற்றின் மூலம் கட்டி கொடுக்கப்பட்ட 46 தொகுப்பு வீடுகள் தற்போது பழுதடைந்து உள்ளன. இந்த வீடுகளில் மேற்கூரைகள் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளதால், இங்கு வசிப்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே இந்த வீடுகளை சீரமைத்து தர விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

தீர்வு காண உத்தரவு

பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று ஆய்வு நடத்திய கலெக்டர் சாந்தி அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அப்போது அவர் கூறுகையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 483 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அளித்துள்ள கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உடனடி தீர்வு காண உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

இதைத் தொடர்ந்து, உதவியாளர் பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் 2 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜசேகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவிதா, பழங்குடியினர் நல மாவட்ட திட்ட அலுவலர் ரமேஷ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மரியம் ரெஜினா மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்