அரசு புறம்போக்கு நிலங்களில் ஏழை, எளிய குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்-குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் மனு

Update: 2022-12-05 18:45 GMT

தர்மபுரி:

அரசு புறம்போக்கு நிலங்களில் ஏழை, எளிய குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

கல்வி உதவித்தொகை

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு புதிய குடும்ப அட்டை, இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். இந்த கூட்டத்தில் மொத்தம் 560 மனுக்கள் அளிக்கப்பட்டன.

கூட்டத்தில் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் அளித்த கோரிக்கை மனுவில், தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பொங்கல் போனசாக தலா ரூ.7 ஆயிரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடு கட்டும் திட்டத்தில் ரூ.4 லட்சம் வழங்கப்படுகிறது. தகுதி உள்ள தொழிலாளர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும். நலவாரிய தொழிலாளர்களின் குடும்பங்களை சேர்ந்த 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

பட்டா வழங்க வேண்டும்

கோவிலூர் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், இருளப்பட்டி காட்டுக்கொட்டாய் பகுதியில் 30 ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் வசதி படைத்த பலர் பட்டா பெற்றுள்ளனர். இதுகுறித்து ஆய்வு நடத்த வேண்டும். எங்கள் பகுதியில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்கள், விவசாய சாகுபடி செய்து வரும் ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று ஆய்வு நடத்திய கலெக்டர் சாந்தி அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜசேகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவிதா, மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் ரமேஷ்குமார் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்