கலெக்டரிடம் மூதாட்டி கண்ணீர் மல்க புகார் மனு
கலெக்டரிடம் மூதாட்டி கண்ணீர் மல்க புகார் மனு கொடுத்தார்.
ராமநாதபுரம் அருகே உள்ள சித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மலைகண்ணன் என்பவரின் மனைவி வள்ளி (வயது68). இவர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனக்கு சொந்தமான நிலத்தை எனது மகன் ஆசை வார்த்தை கூறி எழுதி வாங்கி அவரின் பெயரில் பத்திரம் மற்றும் பட்டா மாற்றம் செய்து கொண்டார். மகன்தானே அவன்தான் நம்மை காப்பாற்றுவான் என்று நம்பி ஏமாந்து பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டேன். தற்போது எனது மகன் வெளிநாடு சென்றுவிட்டான். மருமகள் எனக்கும் இந்த நிலத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி தினமும் அடித்து விரட்டி கொடுமைப்படுத்தி வருகிறார். இதனை எனது மகன் கண்டுகொள்வதில்லை. வயதான காலத்தில் என்னை கவனிக்காதவர்களுக்கு எனது நிலம் தேவையில்லை. அவர் களிடம் இருந்து எனது நிலத்தினை மீண்டும் பெற்றுத் தந்தால் அதனை வைத்து சாகும்வரை யார் தயவும் இன்றி பிழைத்து கொள்வேன். எனது மருமகள் கொடுமை தாங்க முடிய வில்லை என்று கூறி கலெக்டர் முன்னிலையில் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு வள்ளி கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. அவரிடம் மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்தார்.