சொத்து வரி உயர்வை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்- ஈரோடு மாநகராட்சி மேயரிடம் மனு

சொத்து வரி உயர்வை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்- ஈரோடு மாநகராட்சி மேயரிடம் மனு

Update: 2022-09-14 21:24 GMT

ஈரோடு

ஈரோடு வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கத்தினர், மாநகராட்சி மேயர் நாகரத்தினத்திடம் கோரிக்கை மனு ஒன்றை நேற்று கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

ஈரோடு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சோலார் பகுதியில் புறநகர் பஸ் நிலையம் அமைத்து தர ஏற்பாடு செய்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம். தமிழகத்தில் சொத்து வரி உயர்வை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதேபோல் தேர்தல் வாக்குறுதியின்படி குப்பை வரியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரே கட்டிடத்தின் முன்புறம் வணிக பயன்பாடும், பின்புறம் குடியிருப்பு பகுதியாக இருந்தால் ஒட்டு மொத்தமாக வணிகத்திற்குரிய வரி போடாமல், பயன்பாட்டிற்கு ஏற்றாற்போல் வரி சதவீதத்தை குறைக்க வேண்டும். மாநகராட்சி முறையாக டிமாண்ட் நோட்டீஸ் கட்டிட உரிமையாளர்களிடம் வழங்கி வரி வசூலிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

முன்னதாக ஈரோடு மாநகராட்சி அலுவலகம் முன்பு மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கத்தினர் கோஷங்கள் எழுப்பினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்