கடன் பெற்று தருவதாக கூறி மகளிர் குழுக்களிடம் ரூ.4¾ லட்சம் மோசடி-குறைதீர்க்கும் கூட்டத்தில் பெண்கள் புகார் மனு

கடன் பெற்று தருவதாக கூறி மகளிர் குழுக்களிடம் சுமார் ரூ.4¾ லட்சம் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குறைதீர்க்கும் கூட்டத்தில் பெண்கள் புகார் மனு கொடுத்தனர்.

Update: 2022-08-29 18:15 GMT

நாமக்கல்:

மகளிர் குழுக்கள்

நாமக்கல் அருகே உள்ள ரெட்டிப்பட்டியை சேர்ந்த பெண்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிகாரிகளிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்கள் ஊரில் 64 பேர் சேர்ந்து மகளிர் குழு ஏற்படுத்தி சிறு, குறு தொழில்கள் செய்து வாழ்ந்து வருகிறோம். இந்தநிலையில் கரூரை சேர்ந்த சில நபர்கள் மற்றும் நாமக்கல் அழகுநகரை சேர்ந்த பெண் ஒருவரும், எங்களிடம் வந்து நாங்கள் உங்களுக்கு கடன் பெற்று தருகிறோம் என்று கூறினார்கள். அதன்படி நாங்கள் 64 பேரும் 14-12-2020 அன்று தலா ரூ.18,250 கடன் பெற்றோம். 13-9-2021 அன்று வரை கடனை வட்டியும், அசலுமாக திருப்பி செலுத்திவிட்டோம்.

தொடர்ந்து கொரோனா காலம் என்பதாலும், நாங்கள் ஏழை, எளிய மக்கள் என்பதாலும் கடன் கொடுத்த நிறுவனம் நீங்கள் அனைவரும் அசல் மற்றும் வட்டியை அதிகமாகவே செலுத்திவிட்டீர்கள். இனி நீங்கள் கட்ட வேண்டாம் என்று கூறிவிட்டார்கள். ஆனால் அதே நிறுவனத்தில் பணிபுரியும் பெண் உள்பட 2 பேர் நீங்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டினால், உங்களுக்கு நாங்கள் ரூ.40 லட்சம் காசோலை தருகிறோம் என்று எங்களிடம் அதற்கான காசோலையை காட்டினார்கள்.

பணம் மோசடி

இதையடுத்து நாங்கள் அனைவரும் சேர்ந்து ரூ.4 லட்சத்து 85 ஆயிரத்தை மொத்தமாக கட்டினோம். ஆனால் அவர்களிடமிருந்து எந்த ஒரு தகவலும் வரவில்லை. மேலும் பணம் கொடுத்தது குறித்து கேட்டபோது, கொலை செய்வதாக மிரட்டுகிறார்கள்.

தற்போது எங்களுடைய 64 பேரின் காசோலை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல், பத்திரம் போன்றவற்றை தர மறுக்கிறார்கள். எனவே ரூ.40 லட்சம் கடன் தருகிறோம் என்று சொல்லி எங்களை ஏமாற்றி ரூ.4 லட்சத்தை 85 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர்கள் கூறி இருந்தனர்.

மேலும் செய்திகள்