சேந்தமங்கலத்தில் மோதல்: இருதரப்பினர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு

சேந்தமங்கலத்தில் மோதல் தொடர்பாக இருதரப்பினர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Update: 2022-08-10 18:18 GMT

நாமக்கல்:

கொல்லிமலையில் நடந்த வல்வில் ஓரி விழாவுக்கு கடந்த 3-ந் தேதி சேந்தமங்கலம் வழியாக ஒரு சமூகத்தினர் வாகனங்களில் சென்றனர். சேந்தமங்கலம் வண்டிபேட்டை அருகே வந்தபோது மற்றொரு தரப்பினருக்கும், இவர்களுக்கும் இடையே போக்குவரத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் அங்கு கொடி கம்பத்தில் இருந்த ஒரு தரப்பினரின் கொடி கிழிக்கப்பட்டது. இதனால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் சம்பவம் தொடர்பாக இருதரப்பிலும் சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

இதற்கிடையே இந்த வழக்கில் புகார் அளித்த இருதரப்பினரும் நேற்று நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சேகரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் எங்கள் இருசமூகத்தினருக்கும் இடையே எவ்வித பிரச்சினையும் இல்லை. நாங்கள் அண்ணன், தம்பிகளாக பழகி வருகிறோம். ஆனால் சமூக வலைதளங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும், எங்கள் இருசமூகத்தினருக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. எனவே நாங்கள் கொடுத்த வழக்கில் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் எனவும், வழக்கினை முடித்து கொடுக்கும்படியும் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் அவர்கள் கூறி இருந்தனர்.

மேலும் செய்திகள்