அருந்ததியர் குடியிருப்பு பாதை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் கிராம மக்கள் மனு

Update: 2023-07-03 19:30 GMT

தர்மபுரி:

ஏரியூர் அருகே எம்.தண்டா அருந்ததியர் குடியிருப்பு பாதை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு திரண்டு வந்து கோரிக்கை மனு அளித்தனர்.

வழிப்பாதை பிரச்சினை

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். இந்த கூட்டத்தில் ஏரியூர் அருகே உள்ள எம். தண்டா அருந்ததியர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் இந்த பகுதியில் 60- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் குடியிருப்பின் பின்பகுதியில் உள்ள ஒரு நிலத்தின் உரிமையாளர் பாதை பிரச்சினை காரணமாக எங்களை இந்த பகுதியில் இருந்து வெளியேற்ற முயற்சி செய்து வருகிறார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நாங்கள் அந்த பகுதியில் தொடர்ந்து வசிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழிப்பாதை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கோரியிருந்தனர்.

துரத்தும் நாய்கள்

வாணியாறு அணை பகுதியில் வசிக்கும் மீனவர் குடும்பங்களை சேர்ந்தவர்கள் திரண்டு வந்து கொடுத்த கோரிக்கை மனுவில், கடந்த 36 ஆண்டுகளாக பொதுப்பணித்துறைக்கு சொந்தமாக கட்டப்பட்ட வீடுகளில் குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக நிலமோ, வீடோ இல்லை. இந்த நிலையில் நாங்கள் வசிக்கும் வீடுகளை காலி செய்யுமாறு கூறுகிறார்கள். இதனால் எங்கள் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. எனவே நாங்கள் இந்த வீடுகளில் தொடர்ந்து வசிக்க அனுமதிக்க வேண்டும். அல்லது அதே ஊரில் நாங்கள் தங்க இடம் வழங்கி மீன் பிடி தொழிலை நிரந்தரமாக மேற்கொள்ள உதவ வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

தர்மபுரி அன்ன சாகரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், தர்மபுரி நகராட்சி 32- வது வார்டுக்கு உட்பட்ட அன்னசாகரம் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகரித்து விட்டது. சாலைகளில் செல்வோரை நாய்கள் துரத்தி வருகின்றன. இதேபோல் இரவு நேரம் முழுவதும் நாய்கள் குரைத்துக் கொண்டே இருக்கின்றன. எனவே இந்த பகுதிகளில் நாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

கூட்டத்தில் பொது மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கிய கலெக்டர் சாந்தி உரிய ஆய்வின் அடிப்படையில் மனுக்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்