மாற்றுத்திறனாளிகளை நிரந்தர பணியில் அமர்த்த வேண்டும்-குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை

தொகுப்பூதியத்தில் வேலை செய்யும் மாற்றுத்திறனாளிகளை நிரந்தர பணியில் அமர்த்த வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Update: 2023-07-24 19:58 GMT

தொகுப்பூதியத்தில் வேலை செய்யும் மாற்றுத்திறனாளிகளை நிரந்தர பணியில் அமர்த்த வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பொது மக்களிடம் இருந்து மனுக்களை வாங்கி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தை சேர்ந்த கிருஷ்ண குமார் மற்றும் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அப்போது கிருஷ்ணகுமார் உடலில் சுவரொட்டிகள் கட்டிக்கொண்டு நூதனமாக வந்தார்.

அவர்கள் கொடுத்த மனுவில், நெல்லை மாநகரில் சாலையின் நடுவே பிரிக்கும், பாதுகாப்பு அளிக்கும் டிவைடர்கள் இரும்பு தடுப்புகள், சுவர்களின் சுவரொட்டிகள் ஓட்டுகிறார்கள். சாலைகளில் விளம்பர பலகைகள் வைக்க கூடாது என்ற உத்தரவை மீறி விளம்பரம் அமைக்கப்படுகிறது. மேலும் அரசு பள்ளி சுவர்கள், டவுன் தாலுகா அலுவலக சுவர், தேர்தல் ஆணைய சுவர், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அரசியல் கட்சியினர், தனியார், சினிமா சுவரொட்டிகள்ஒட்டப்பட்டு வருகிறது. இது வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பி விபத்தை ஏற்படுத்துகிறது. எனவே சுவரொட்டிகள் ஒட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறப்பட்டு இருந்தது.

அமரர் ஊர்தி டிரைவர்கள்

தமிழ்நாடு இலவச அமரர் ஊர்தி மற்றும் தாய்-சேய் நல ஊர்தி தொ.மு.ச. மாநில தலைவர் செந்தில்குமார், பொதுச்செயலாளர் ராஜேஷ் புஷ்பராஜ் மற்றும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி அமரர் ஊர்தி டிரைவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

எங்களது சக டிரைவர் விக்னேஷ் பாபு கடந்த 20-ந் தேதி நெல்லை அருகே உள்ள வெங்கடாசலபுரம் பகுதியை சேர்ந்த ஒரு பெண் உடலை, ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் இருந்து அமரர் ஊர்தியில் சொந்த ஊருக்கு கொண்டு சென்றார். அங்கு வாகனத்தை சேதப்படுத்தி, டிரைவரையும் தாக்கிவிட்டனர். இதில் காயம் அடைந்த விக்னேஷ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நாங்கள் பல ஊர்களுக்கு பிரேதங்களை தனியாக எடுத்து செல்கிறோம். எனவே அமரர் ஊர்தி டிரைவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறிஉள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். கிளை பொறுப்பாளர் மெய்யாசாமி தலைமையில் மாவட்ட தலைவர் பெருமாள், செயலாளர் முத்து மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ''காது கேளாதோர், வாய் பேசாதோர் புரிந்து கொள்ளும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் கலெக்டர், போலீஸ் அலுவலகங்கள், ஆஸ்பத்திரி உள்பட பொது இடங்களில் சைகை மொழி பெயர்ப்பாளரை நியமிக்க வேண்டும். தொகுப்பூதியத்தில் வேலை செய்யும் மாற்றுத்திறனாளிகளை நிரந்தர பணியில் அமர்த்த வேண்டும். அரசு பணிகளில் காது கேளாதோர், வாய் பேசாதோருக்கு 1 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்'' என்று கூறிஇருந்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மேலப்பாளையம் பகுதி செயலாளர் குழந்தைவேலு கொடுத்த மனுவில், ''சேரன்மாதேவி ஓமநல்லூர் பகுதியில் கல்குவாரியில் இருந்து அதிகமான கனரக வாகனங்கள் மிகச்சிறிய சாலையில் இயக்கப்படுகிறது. மேலும் பச்சையாறு பாலமும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த பகுதிக்கு சிறப்பு உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்த வேண்டும்'' என்று கூறிஉள்ளார்.

அபிஷேகப்பட்டி

நெல்லை அபிஷேகப்பட்டியில் ஆதிதிராவிட மக்கள் குடியிருந்து வரும் வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும். அந்த வீடுகளை இந்து சமய அறநிலையத்துறை வசம் ஒப்படைக்குமாறும் இல்லை என்றால் சீல் வைத்து விடுவோம் என்றும் மிரட்டுகின்றனர். எனவே எங்களது வீடுகளை பாதுகாத்து தரவேண்டும்'' என்று அந்த ஊர் மக்கள் கொடுத்த மனுவில் கூறிஉள்ளனர்.

கிறிஸ்தவ வக்கீல்கள், கையில் பேனர்களை ஏந்தியவாறு சென்று கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் மணிப்பூர் மாநிலத்தில் நிலவும் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பது தொடர்பாக வலியுறுத்தி இருந்தனர்.

3 மாத பெண் குழந்தை

மதுரை திருநகர் நேதாஜி 2-வது தெருவை சேர்ந்தவர் ஹயக்கிரீவன் (வயது 45). இவர் நெல்லை மாவட்ட கலெக்டரிடம் நேற்று ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில், என்னுடைய மனைவிக்கு மனநோய் பாதிப்பு உள்ளது. இதனால் என்னுடைய 3 மாத பெண் குழந்தையை மதுரை குடும்ப நல கோர்ட்டு உத்தரவுப்படி எனது பொறுப்பில் வளர்த்து வந்தேன். இந்த நிலையில் கடந்த மாதம் என்னுடைய மகளை, கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த என்னுடைய மனைவி குடும்பத்தினர் கடத்திச்சென்று விட்டனர்.

இது தொடர்பாக அம்பை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே என்னுடைய மகளை பார்க்கவும், அவளை என்னிடம் ஒப்படைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறிஉள்ளார். இதே போல் பல்வேறு பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்