புத்தகம் வாசிப்பதன் மூலம் ஆளுமை திறன் வளர்ச்சி அடையும்

புத்தகம் வாசிப்பதன் மூலம் ஆளுமை திறன் வளர்ச்சி அடையும் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா கூறினார்.

Update: 2023-01-28 16:49 GMT

இலக்கிய திருவிழா

திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சியுடன் கூடிய இரண்டாவது இலக்கிய திருவிழா தூயநெஞ்சக் கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. இதன் தொடக்கவிழாவுக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கினார். நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர் வரவேற்று பேசினார். சாகித்திய அகாடமி விருதுபெற்ற பொன்னீலன் கலந்து கொண்டு இலக்கிய திருவிழாவை தொடங்கி வைத்து பேசினார்.

விழாவில் கலெக்டர் அமர்குஷ்வாஹா பேசியதாவது:-

தற்போதைய காலக்கட்டத்தில் சமூக வலைதளம் என்பது பெரிய சவாலாக உள்ளது. அதில் தவறான செய்திகள் விரைவில் பரவி விடுகின்றன. மாணவ, மாணவிகள் அனைவரும் சமூக வலைதளத்தில் அதிக நேரம் செலவிடுகின்றனர். புத்தகம் வாசிப்பது குறித்து எடுத்துரைக்க வேண்டியது நமது பெற்றோரின் கடமையாகும். புத்தகம் படிப்பதினால் குடும்பத்தின் முக்கியத்துவம் பற்றி அறிந்து கொள்ள முடியும். எனது பிள்ளைகளுக்கு குடும்பத்தின் முக்கியத்துவத்தை ஒரு கதையாக எடுத்துரைக்கிறேன்.

ஆளுமைதிறன் வளர்ச்சி அடையும்

அனைவரும் தினந்தோறும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை செய்வதினால் உறவினர்களுடன் பேச நேரம் ஒதுக்க முடிவதில்லை. அதனால் ஒரு புத்தகத்தை படிப்பது 10 நபர்களிடம் உரையாடுவதற்கு சமம். இதன் மூலம் ஆளுமை திறன் வளர்ச்சி அடையும்.

மேலும் தமிழ்நாடு வரலாறு குறித்து அனைவரும் அறிய சங்க இலக்கியங்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. 2500 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழர்கள் வாழ்ந்த வரலாறு, தொன்மைகள் போன்றவற்றை அனைவரும் அறிய முடியும். இந்திய ஆட்சிப்பணிக்கு ஆயத்தமாகும் மாணவ, மாணவிகள் ஒரு பாடமாக இலக்கியம் தேர்வு செய்ய வேண்டும். இந்த இலக்கியத் திருவிழாவில் 60 முதல் 70 கவிஞர்கள், அறிஞர்கள் 17 அமர்வுகளில் சிறப்புரை ஆற்ற உள்ளனர். இதன் மூலம் இலக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.

அனைவரும் புத்தகங்கள் வாசிப்பதை ஒரு பழக்கமாக கருத வேண்டும். வருகிற 5-ந் தேதி வரை நடைபெறும் இலக்கிய திருவிழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கி படித்து தங்களின் அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், டெல்பிக் கவுன்சில் ஆப் தமிழ்நாடு தலைவர் இஸ்ரத் அக்தர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஷ்வரி, வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயகுமார், மாவட்ட கல்வி அலுவலர் வேதபிரகாசம், கல்லூரி முதல்வர் மரிய அந்தோணிராஜ், செயலாளர் ஜான் அலெக்ஸாண்டர் மற்றும் பள்ளி, கல்லூரிகளின் முதல்வர்கள், தமிழ் பேராசிரியர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்