நீர்நிலைகளில் மண் எடுக்க அனுமதி
நீர்நிலைகளில் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் 2023-24-ம் ஆண்டிற்கு நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 90 ஏரிகள் மற்றும் ஊரக வளர்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 534 குளங்கள், ஏரிகளில் மட்டும் வண்டல் மண், சவுடு மண், கிராவல் மண் போன்ற கனிமங்களை வேளாண் உபயோகம், சொந்த வீட்டு உபயோகம் மற்றும் மண்பாண்டம் தயாரித்தல் ஆகிய காரியங்களுக்காக இலவசமாக எடுத்து செல்ல அனுமதி வழங்கும் பொருட்டு அரியலூர் மாவட்ட அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாவட்ட அரசிதழ் அனைத்து வருவாய் வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் நீர்வளத்துறை அலுவலர்களின் அலுவலகங்களுக்கு பரந்த விளம்பரம் செய்யும் பொருட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள், விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் ஆகியோரிடம் இருந்து அரியலூர் மாவட்ட அரசிதழில் குறிப்பிட்ட குளங்கள், ஏரிகளில் இருந்து மட்டும் வண்டல் மண், சவுடு மண், கிராவல் மண் போன்ற கனிமங்களை இலவசமாக எடுத்து கொள்ள அனுமதி கோரி சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர்களிடம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் வேளாண் உபயோகத்திற்கு நிலத்திற்கான கணினி சிட்டா நகலும், வீட்டு உபயோகத்திற்கு வீட்டிற்கான நத்தம், கணினி சிட்டா நகலும், மண்பானை தயாரிப்பு உபயோகத்திற்கு மண்பானை செய்துவரும் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலரின் சான்றும் மற்றும் வசிப்பிட முகவரிக்கு ஆதாரமாக குடும்ப அட்டை நகல் அல்லது ஆதார் அட்டை நகலினை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். எனவே பொதுமக்கள் இந்த அறிய வாய்ப்பினை பருவமழை காலம் தொடங்குவதற்கு முன்பே பயன்படுத்தி பயனடையுமாறு கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.