100 குளங்களில் இருந்து மண் எடுக்க அனுமதி

குமரி மாவட்டத்தில் 100 குளங்களில் இருந்து மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிகாரிகள் கூறினர்.

Update: 2023-04-27 20:56 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் 100 குளங்களில் இருந்து மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிகாரிகள் கூறினர்.

குறைதீர்க்கும் கூட்டம்

குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கினார். வேளாண் தொழில்நுட்பங்கள் காணொளி மூலம் எடுத்துரைக்கப்பட்டன. தொடர்ந்து மாவட்டத்தில் இந்த மாத மழை விவரம் மற்றும் அணைகளின் நீர்மட்டம் விவரம் தெரிவிக்கப்பட்டது.

வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் நஸ்ரின் தென்னை மரத்தில் நோய் கட்டுப்பாட்டு முறைகள் பற்றி எடுத்துரைத்தார். பின்னர் வேளாண் வணிகத்துறை மற்றும் குமரி விற்பனைக்குழு சார்பில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் பயன்களும் நலத்திட்டங்களும் பற்றிய புத்தகம் மாவட்ட கலெக்டரால் வெளியிடப்பட்டது. தொடர்ந்து விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

மண் எடுக்க அனுமதி

புலவர் செல்லப்பா:- நீர்ப்பாசன கால்வாய்களின் கரைகளில் சிமெண்ட் சாலை அமைத்தல் மற்றும் அலங்கார ஓடு பதிப்பதால் கால்வாய்களில் தூர்வாரும் மண்ணை கரைகளில் வைக்க முடியவில்லை. எனவே அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட குளங்கள் தூர்வார வேண்டியது உள்ளது. ஒவ்வொரு துறையும் இழுத்தடிப்பதால் இந்த நிலை ஏற்படுகிறது. ஆனால் சுப்பையார் குளத்தில் எந்த அனுமதியும் இல்லாமல், வரைமுறையின்றி மண் எடுக்கப்படுகிறது. ஆனால் விவசாயிகள் அனுமதி கேட்டால் கொடுப்பதில்லை. புத்தன்அணையில் இருந்து நாகர்கோவில் மாநகராட்சிக்கு தண்ணீர் எடுக்கக்கூடாது. மாற்றுத்திட்டங்களை ஆராய வேண்டும். வறட்சி என்பது நாகர்கோவிலில் மட்டும் இல்லை. மாவட்டத்தில் அனைத்து பகுதியிலும் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. எனவே பேச்சிப்பாறை அணையில் இருந்து அனைத்து கால்வாய்களிலும் தண்ணீர் திறக்க வேண்டும்.

வின்ஸ் ஆன்றோ:- குமரி மாவட்ட குளங்களில் இருந்து வண்டல்மண் எடுப்பதற்கு நிலுவையில் உள்ள மனுக்களுக்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும். நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றோருக்கு சான்றிதழ் கிடைக்கவில்லை. அதனைப்போன்று காலியாக உள்ள இடங்களுக்கு உடனே தேர்தல் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். பதவி ஏற்பு விழாவும் நடத்த வேண்டும்.

ஆகாயத்தாமரை

செண்பக சேகரபிள்ளை:- பூதப்பாண்டி உபகோட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகொண்டான் வாய்க்காலை தூர்வாரவும் சிமெண்ட் தளம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காந்தி:- அரசு தென்னை நாற்றுப் பண்ணையில் தென்னங்கன்றுகள் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அருள்:- பழையாறு குமரி அணையின் மூலம் பாசனம் பெறும் சுசீந்திரம் கால்வாயை தூர்வார வேண்டும். பிச்சாத்தி கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

சுப்பிரமணியபிள்ளை:- சுசீந்திரம் குளத்திலுள்ள ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும்.

இதுபோல் பல விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.

காலி இடங்களுக்கு தேர்தல்

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் பதில் அளித்து பேசும்போது கூறியதாவது:-

கால்வாய்களில் தூர்வாரும் மண்ணை கரைகளில் வைப்பது குறித்து மாவட்ட உயர்மட்ட குழு கூட்டத்தில் விவாதித்து முடிவு எட்டப்படும். குமரி மாவட்டத்தில் 100 குளங்களில் இருந்து மண் எடுக்க அனுமதி அளித்துள்ளது. குளங்களில் இருந்து மண் எடுப்பதற்கு 302 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. அதிகாரிகள் பரிசீலித்து மண் எடுப்பதற்கு அனுமதி அளித்து வருகிறார்கள். ஒரு வார காலத்திற்குள் மண்மாதிரி முடிவுகள் கிடைக்கப்பெற்று நிலுவையில் உள்ள மனுக்கள் அனைத்துக்கும் தீர்வு காணப்படும். நீரினை பயன்படுத்துவோர் சங்கத்துக்கு காலியாக உள்ள இடங்களுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும். பள்ளிகொண்டான் வாய்க்காலை தூர்வாரி, சிமெண்டு தளம் அமைக்கும் பணி ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் வெள்ளசேத தடுப்பு பணிக்கான கருத்துருவில் இணைக்கப்பட்டுள்ளது. தென்னங்கன்று விலையை குறைப்பது தொடர்பாக அரசு மட்டத்தில் தான் முடிவு எடுக்கப்பட வேண்டும். சுசீந்திரம் கால்வாய் தூர்வாரும் பணியை வருடாந்திர பராமரிப்பு நிதியில் இருந்து மேற்கொள்ளலாம். பிச்சாந்தி கால்வாயில் எல்கை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு வார காலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். தனியார் தொண்டு நிறுவனம் மூலம் ஏற்கனவே 80 டன் ஆகாயத்தாமரை அகற்றப்பட்டுள்ளது. மீண்டும் அதேபோல் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கூட்டத்தில் சிறப்பு மாவட்ட வருவாய் அதிகாரி (தேசிய நெடுஞ்சாலை-நிலமெடுப்பு) ரேவதி, வேளாண்மை இணை இயக்குனர் ஹனிஜாய் சுஜாதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சந்திரசேகரன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் ராஜா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கீதா, தோட்டக்கலை துணை இயக்குனர் ஷீலாஜாண், கால்நடைப் பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பாரிவேந்தன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்