கடலூா் மாவட்டத்தில்227 நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்கலாம்கலெக்டர் அறிவிப்பு
கடலூா் மாவட்டத்தில் 227 நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளில் சேர்ந்துள்ள வண்டல் மண், மண், களிமண் போன்ற ஏனைய சிறு கனிமங்களை பொது மக்கள் தங்களது பயன்பாட்டிற்காக இலவசமாக எடுத்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
227 நீர்நிலைகள்
அரசாணைப்படி கடலூர் மாவட்ட அரசிதழ் மூலமாக வெளியீடு செய்யப்பட்டுள்ள 227 நீர்நிலைகளில் சேர்ந்துள்ள வண்டல் மண், மண், களிமண் போன்ற கனிமங்களை விவசாயிகள் பயன்பாட்டிற்காகவும், பொது பயன் பாட்டிற்காகவும் மற்றும் குயவர்கள் பயன்பாட்டிற்காகவும் எடுத்துக்கொள்ள பொதுமக்கள் சம்பந்தப்பட்ட தாசில்தாரை அணுகி அனுமதி பெற உரிய படிவத்தில் மனு அளித்து பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.