கடைகளை 24 மணிநேரமும் திறந்துவைக்க அனுமதி -தமிழக அரசு உத்தரவு

கடைகள் 24 மணிநேரமும் திறந்திருக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-06-08 23:26 GMT

சென்னை,

பொதுமக்கள் நலன் கருதி, 10 மற்றும் அதற்கு மேற்பட்ட பணியாளர்களை கொண்ட கடைகள் மற்றும் நிறுவனங்கள், 5.6.2022 முதல் 3 ஆண்டுகளுக்கு 24 மணிநேரமும் அனைத்து நாட்களிலும் திறந்து வைக்க அனுமதி அளிக்கும் வகையில், அதற்கான சட்ட விதிகளை தளர்த்தி கவர்னர் உத்தரவிட்டு உள்ளார்.

இதற்கான நிபந்தனைகளும் அறிவிக்கப்படுகின்றன. அதன்படி, ஒவ்வொரு பணியாளருக்கும் சுழற்சி முறையில் வாரம் ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும். கடை பணியாளர்களின் பெயரை சட்டப்படி பதிவு செய்வதோடு, கடையில் அனைவரது பார்வையில் படும் இடத்தில் கடை உரிமையாளர் காட்சிப்படுத்த வேண்டும்.

சம்பளம் மற்றும் கூடுதல் பணிநேர (ஓவர் டைம்) சம்பளம் ஆகியவை அவர்களின் சேமிப்பு வங்கிக்கணக்கில் சேர்க்கப்பட வேண்டும். ஒரு நாளுக்கு 8 மணி நேரம், ஒரு வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு மேல் யாரையும் வேலை செய்ய வைக்கக் கூடாது.

மீறினால் குற்ற நடவடிக்கை

அதுபோல 'ஓவர் டைம்' நேரமும் நாளொன்றுக்கு 10½ மணி நேரத்தையும், வாரம் ஒன்றுக்கு 57 மணிநேரத்தையும் தாண்டக் கூடாது. இந்த நேரங்களை கடந்து பணியாளர் யாரும் பணியாற்றுவது கண்டறியப்பட்டால் உரிமையாளர் அல்லது மேலாளர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுவாக பெண் பணியாளர்கள் யாரையும் இரவு 8 மணிக்கு மேல் பணியாற்ற வைக்கக்கூடாது. பெண் ஊழியரிடம் இருந்து எழுத்து மூலம் சம்மதம் பெற்றுக்கொண்டு இரவு 8 மணி முதல் காலை 6 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் பணியாற்ற அனுமதிக்கலாம். ஆனால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கியிருக்க வேண்டும்.

சுழற்சி முறையில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதி வழங்க வேண்டும். பணியாளர்களுக்கு கழிவறை, ஓய்வறை, பாதுகாப்பு பெட்டகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்க வேண்டும். பெண்களிடம் இருந்து பாலியல் உள்ளிட்ட புகார்களை பெறுவதற்காக குழு ஒன்றை கடை உரிமையாளர் அமைக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகள் மீறப்பட்டால் அந்த கடை உரிமையாளர் அல்லது மேலாளர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டு அரசாணை

தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காக கடைகள் மற்றும் நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்து வைக்கலாம் என்று தமிழக அரசு 2019-ம் ஆண்டு அரசாணை வெளியிட்டது. அதன்பிறகு ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.

கடை திறக்கும் அனுமதியானது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படுவதால் கடந்த முறை வழங்கிய அனுமதி இம்மாதம் 8-ந் தேதியோடு (நேற்று) முடிவடைந்தது.

இந்த நிலையில் தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்