பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் ரூ.72 கோடியில் சிறப்பு மருத்துவமனை கட்டிடம்

பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் ரூ.72 கோடியில் கட்டப்படவுள்ள சிறப்பு மருத்துவமனை கட்டிடத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.;

Update: 2023-03-08 21:43 GMT

சென்னை,

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் 2022-23-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில், சென்னை பெரியார் நகர் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை, விபத்துகாய சிகிச்சை பிரிவு, தொற்றுநோய் பிரிவு, டயாலிசிஸ், ரத்த வங்கி போன்ற சேவைகள் வழங்க உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூ.71 கோடியே 81 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும், முதல்-அமைச்சர் சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் 7-5-2022 அன்று ''உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்'' திட்டத்தின் கீழ், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது தொகுதி மக்களுடைய தேவைகளை அறிந்து அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் 10 முக்கியத் திட்டங்கள் குறித்த பட்டியலை அளிக்க வேண்டும் என்று அறிவித்தார்.

மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

இந்த அறிவிப்பின்படி, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள பெரியார் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவமனை அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி, பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் தரை மற்றும் 3 தளங்களுடன் 1 லட்சத்து 18 ஆயிரத்து 371 சதுர அடி பரப்பளவில் ரூ.71 கோடியே 81 லட்சம் மதிப்பீட்டில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவு கொண்ட சிறப்பு மருத்துவமனைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.

இப்புதிய மருத்துவமனையில், மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்யேக வசதிகளுடன்கூடிய ஆண்கள் மற்றும் பெண்களுக்கான புறநோயாளிகள் பிரிவு, கூழாங்கல் பதித்த நடைபயிலும் கூடம் மற்றும் இயன்முறை சிகிச்சைக் கூடம், மாற்றுத்திறனாளிகளுக்கான உள்நோயாளிகள் பிரிவு வார்டுகள், செயற்கை கை, கால் தயாரிக்கும் கூடம் ஆகியவையும், 20 படுக்கைகளுடன் தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முனைப்பு உயர்த்துதல், எக்கோ ஆய்வகம், மகப்பேறு பிரிவு, ரத்த வங்கி, 3 அறுவை சிகிச்சை அரங்குகள், பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு, முழு உடல் பரிசோதனை மையம், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டப் பிரிவு, நம்மை காக்கும் 48 திட்டப் பிரிவு, அனைத்து வித தீவிர சிகிச்சை பிரிவுகள் போன்ற மருத்துவப் பிரிவுகள் அமைக்கப்படவுள்ளது.

மறுசுழற்சி கட்டமைப்புகள்

இப்புதிய கட்டிடத்தில் மின் தூக்கி வசதிகள், ஜெனரேட்டர் வசதிகள், சிறப்பு மருத்துவ எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், தீத்தடுப்பு கட்டமைப்புகள், கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் மறுசுழற்சிக் கட்டமைப்புகள் போன்ற வசதிகளும் அமைக்கப்படவுள்ளன.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, எம்.பி.க்கள் கலாநிதி வீராசாமி, ஆர்.கிரிராஜன், துணை மேயர் மு.மகேஷ் குமார், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ப.செந்தில்குமார், தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் டாக்டர் எஸ்.உமா, மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் சாந்திமலர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேம்பால பணி

சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வில்லிவாக்கம் ரெயில்வே சந்திக்கடவில் ரூ.61.98 கோடியில் வில்லிவாக்கம் சந்திக்கடவு எண்.1-க்கு மாற்றாக வடக்கில் கொளத்தூர் பிரதான சாலையையும், தெற்கில் ஐ.சி.எப். சாலையையும் இணைக்கும் வண்ணம் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், வில்லிவாக்கம் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் ரூ.1.14 கோடியில் நடைபாதை, சிறுவர் விளையாட்டு திடல், திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், குடிநீர் வசதி, மரம், செடி மற்றும் புல்வெளி அமைத்தல், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலான கழிப்பறை, மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு, கண்காணிப்பு கேமராக்கள் ஆகிய வசதிகளுடன் புதியதாக அமைக்கப்பட உள்ள பூங்காவுக்கு மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

கோவில் குளம்

அதனைத்தொடர்ந்து, கொளத்தூர் 65-வது வார்டுக்குட்பட்ட பூம்புகார் நகர் 28-வது தெருவில் ரூ.69.20 லட்சத்தில், திருவீதியம்மன் கோவில் குளத்தினை தூர்வாரி, அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு வசதி, நடைபாதை, யோகா மேடை மற்றும் திறந்தவெளி ஆண்கள் உடற்பயிற்சி மையம் ஆகியவற்றை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பின்னர், மழைக்காலங்களில் வீனஸ் நகர் மற்றும் செல்வி நகர் பகுதிகளில் நீர்தேங்காத வகையில் ரூ.2 கோடியே 80 லட்சத்தில் 2 மழைநீர் வெளியேற்றும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மழைநீர் வெளியேற்று நிலையமும் தலா 1.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு மழைநீர் தேங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நீரை அகற்ற ஒவ்வொரு தொட்டியிலும் 100 குதிரைத்திறன் கொண்ட 2 நீர்மூழ்கி மோட்டார்கள் பொருத்தப்பட்டு மோட்டார் அறைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய 2 நீரேற்று நிலையங்களை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, குடியிருப்பு நலச்சங்கத்தினரிடம் நீரேற்று நிலையங்களுக்கான சாவிகளை வழங்கினார்.

நலத்திட்ட உதவி

முன்னதாக, கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பெறப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, பயனாளிகளுக்கு மருத்துவ உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இஸ்திரி பெட்டிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர ஸ்கூட்டர், காது கேட்கும் கருவி என 119 பேருக்கு மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஒட்டுமொத்தமாக கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.3 கோடியே 49 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து, ரூ.1 கோடியே 14 லட்சம் மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்